நாமக்கல்: நாமக்கல் அருகே 2வது திருமணம் செய்து நாடகமாடி மணப்பெண் நகையுடன் ஓட்டம் பிடித்ததால், தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக, இளம்பெண், 5 புரோக்கர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த திடுமல் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (37). ஏற்கனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்ட நிலையில், தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர் 2வது திருமணத்திற்கு பெண் தேடி வந்த நிலையில், திருமல்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் புரோக்கர் கந்தசாமி மனைவி தமிழ்ச்செல்வி (45) என்பவர் மூலம், மதுரையை சேர்ந்த புரோக்கர்கள் ராஜா மற்றும் மாரி, கஸ்தூரி (38), முத்துலட்சுமி (45), வேல்முருகன் (55), சங்கர் என்கிற நாராயணன் (56) ஆகியோர் சிவசண்முகத்திற்கு அறிமுகமாகியுள்ளனர்.
அவர்கள் 2வது திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதற்கு ரூ.4 லட்சம் வரை புரோக்கர் கமிஷன் பேசி, அதில் ரூ.1.20 லட்சம் கமிஷனாக பெற்றுக்கொண்டு, விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகள் தீபா(23) என்பவரை மணப்பெண்ணாக காண்பித்தனர். பின்னர், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு கோயிலில், கடந்த 7ம் தேதி சிவசண்முகம்-தீபாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்ததும், சிவசண்முகம் மனைவியுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், சிவசண்முகம் தனது அக்கா மலர்கொடி வீட்டிற்கு விருந்துக்கு சென்று தங்கினார். மறுநாள் (10ம் தேதி) காலை நகை, வெள்ளி கொலுசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களுடன் தீபா மாயமானார். இதையறிந்த சிவசண்முகம், அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மேலும், அவரை திருமணம் செய்து வைத்த புரோக்கர்களின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசண்முகம், மனவேதனையடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பணத்திற்காக ஏற்கனவே திருமணமான மதுரை பட்டத்து சந்து பகுதியை சேர்ந்த ஜோதி என்கிற ஜோதிலட்சுமியை (23), தீபா என பெயர் மாற்றம் செய்து, மணப்பெண்ணாக 3 நாட்கள் நடிப்பதற்கு ரூ.30 ஆயிரம் கூலி பேசி, சிவசண்முகத்திற்கு திருமணம் செய்து வைத்ததும், அதன் மூலம் கிடைத்த புரோக்கர் கமிஷனை, 3பெண் புரோக்கர்கள் உள்பட 5 பேரும் பிரித்துக்கொண்டதும் தெரியவந்தது.
திருமணம் என்ற பெயரில் வாலிபரை ஏமாற்றி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலை செய்ய தூண்டியதாக மோசடி திருமணத்தில் ஈடுபட்ட ஜோதிலட்சுமி, புரோக்கர்கள் முத்துலட்சுமி, வேல்முருகன், சங்கர் என்கிற நாராயணன், தமிழ்ச்செல்வி, கஸ்தூரி ஆகிய 6 பேரை நல்லூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள புரோக்கர்களான ராஜா, மற்றும் மாரி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post புதுமாப்பிள்ளை தற்கொலை விவகாரம்; ஏமாற்றி திருமணம் செய்து நகையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது: 5 புரோக்கர்களும் சிக்கினர் appeared first on Dinakaran.