
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் அண்ணா துரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் (27) ஆகியோருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது சாவுக்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய ஆடியோ அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர்.
இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர்.