
சென்னை,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி , சென்னை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (10.2.2025 - திங்கட் கிழமை), ``புதுடெல்லி, எம்.பி. ரோடு, இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார் - 6, பிளாட் எண்கள். 15 & 22'' என்ற முகவரியில் புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி கழக அலுவலகமான ``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித் தலைவி அம்மா மாளிகை''-யை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால், புதுடெல்லி கழக அலுவலகம் அமைப்பதற்காக 21.2.2012 அன்று 10,850 சதுர அடி கொண்ட இடம் மத்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. அம்மா அவர்களால் 5.10.2015 அன்று அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13,020 சதுர அடி கொண்ட இக்கட்டிடம் தரைத் தளம், முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என நான்கு தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது.
புதுடெல்லியில், ``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித் தலைவி அம்மா மாளிகை'' கழக அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதுடெல்லி மாநிலக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.