புதுச்சேரி: புதுச்சேரி பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் நேற்று காலை 3 பேர் படுகாயத்துடன் கிடப்பதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது 2 பேர் தலை, முகத்தில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையிலும், மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி நிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே போலீசார் உயிருக்கு போராடிய நபரை மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரோஜர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். டிஐஜி சத்திய சுந்தரம் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
அதில் கொலை செய்யப்பட்டவர்கள் புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்த பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரஷித் (25), அவரது நண்பர்களான ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ஆதி (24) மற்றும் திடீர் நகரை சேர்ந்த பன்னீர் தேவா (25) என்பது தெரியவந்தது. இதற்கிடையே சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்த ஆதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், ரஷித், தேவா மற்றும் ஆதி ஆகியோரை 3 பைக்கில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் 4 பேரை பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில், அரியாங்குப்பத்தை சேர்ந்த அஸ்வின் தலைமையிலான ரவுடி கும்பலுக்கும், டி.வி. நகரை சேர்ந்த தகடு சத்யா தலைமையிலான ரவுடி கும்பலுக்கும் யார் பெரிய ரவுடி என்பதில் போட்டி இருந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு சத்யா கும்பலை சேர்ந்த முகிலன் என்பவர் பண்ருட்டியில் படுகொலை செய்யப்பட்டார். இதில் அஸ்வின் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனால் அஸ்வின் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சத்யா கும்பல் ஆத்திரத்தில் இருந்துள்ளது. அஸ்வினின் நெருங்கிய கூட்டாளிகளான பிரபல தாதா தெஸ்தான் மகன் ரஷித் மற்றும் ஆதி, தேவா ஆகியோர் செயல்படுவதாக எதிர்தரப்புக்கு தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஷித், ஆதி மற்றும் தேவா ஆகியோர் டி.வி. நகரில் சுற்றி வருவதாக தகடு சத்யாவுக்கு தகவல் கிடைத்தது.
தன்னை தீர்த்துக் கட்ட சுற்றித்திரியலாம் என கருதிய தகடு சத்யா, தனது கூட்டாளிகள் 5 பேருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் 45 அடி சாலை- ரெயின்போ நகர் சந்திப்பு உள்ள பிரபல பேக்கரி கடை அருகே 3 பேரையும் மடக்கி, ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள தனக்கு சொந்தமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கு சத்தம் இல்லாமல் ரஷித், தேவாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். ஆதியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தகடு சத்யா உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.