புதுச்சேரியில் மூன்று புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம்

6 hours ago 2

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 10 மாதங்களில் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி 2026 தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றன.

அந்த வகையில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே மாநிலம் முழுவதும் நடைபயணம் தொடங்கி மக்களை சந்தித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அதன் கூட்டணி கட்சிகளான தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவையும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அறிவித்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பா.ஜனதாவும் தேர்தலை சந்திக்கும் வகையில் ஆட்சியிலும், கட்சியிலும் மாற்றங்களை செய்து வருகிறது.

அதாவது, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பா.ஜனதா அமைச்சரான சாய். சரவணன் குமார் டெல்லி மேலிட உத்தரவின் பேரில் கடந்த 27-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிக்கப்பட்டார். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்களுக்கு பதிலாக நியமன எம்.எல்.ஏ.க்களாக தீப்பாய்ந்தான், செல்வம், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பரிந்துரை கடிதங்களை கவர்னர் கைலாஷ்நாதனிடம் அன்று மாலையே முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அவர் அதனை மத்திய உள்துறை அமைச்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் பா.ஜனதாவின் தேர்தல் வியூகமாகவே அரசியலில் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய அமைச்சர் பதவி ஏற்பு எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் மத்திய அரசிடமிருந்து அமைச்சர் மாற்றத்துக்கு ஒப்புதல் வராததால் கட்சியினரை தொய்வடைய செய்தது.

இந்தநிலையில் பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 14ம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article