புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: சென்னை ₹160 காரைக்கால் ₹130 திருப்பதி ₹275

3 weeks ago 5

புதுச்சேரி: புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னைக்கு ₹160, காரைக்கால் ₹130, திருப்பதி ₹275 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 2018 ஜூன் மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்து துறையின் கூடுதல் செயலர் சிவக்குமார் கடந்த 17ம்தேதி உத்தரவிட்டார். கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பிறகு புதுச்சேரியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பிஆர்டிசி பஸ்களின் புதிய கட்டணம் குறித்த விவரம் வருமாறு:
புதுச்சேரி- சென்னைக்கு (இசிஆர் வழி) கட்டணமாக ₹155ல் இருந்து ₹160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு (பைபாஸ் வழி) செல்லும் பஸ்களுக்கு பழைய கட்டணமாக ₹130 தொடரும். புதுச்சேரி- காரைக்காலுக்கு ₹125ல் இருந்து ₹130 ஆகவும், புதுச்சேரி- வேளாங்கண்ணிக்கு ₹160ல் இருந்து ₹170 ஆகவும், புதுச்சேரி- நாகப்பட்டினம் ₹145ல் இருந்து ₹160 ஆகவும், காரைக்கால்- சென்னைக்கு (இசிஆர் வழி) ₹290ல் இருந்து ₹300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், காரைக்கால்- சென்னைக்கு பைபாஸ் வழியாக செல்லும் பஸ் கட்டணம் ₹290ல் இருந்து ₹275 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்- கோயம்புத்தூருக்கு ₹345ல் இருந்து ₹360 ஆகவும், புதுச்சேரி- திருப்பதிக்கு ₹265ல் இருந்து ₹275 ஆகவும், புதுச்சேரி- பெங்களூருக்கு ₹430ல் இருந்து ₹440 ஆகவும், ஓசூர் – புதுச்சேரிக்கு ₹250ல் இருந்து ₹255 ஆகவும், புதுச்சேரி- நாகர்கோவிலுக்கு ₹610ல் இருந்து ₹620 ஆகவும், புதுச்சேரி- திருநெல்லிவேலிக்கு ₹540ல் இருந்து ₹550 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி- விழுப்புரத்துக்கு ₹27ல் இருந்து ₹33 ஆகவும், புதுச்சேரி- கடலூருக்கு ₹20ல் இருந்து ₹22 ஆகவும், புதுச்சேரி- திண்டிவனத்துக்கு ₹33ல் இருந்து ₹35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: சென்னை ₹160 காரைக்கால் ₹130 திருப்பதி ₹275 appeared first on Dinakaran.

Read Entire Article