புதுச்சேரியில் தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மகன்கள் லாரி மோதி பலி

4 hours ago 2

புதுச்சேரி,

புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடன சபாபதி, அரசு ஊழியர். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஜீவா (வயது 14), துவாரகேஷ்(8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். ஜீவா 9-ம் வகுப்பும், துவாரகேஷ் 3-ம் வகுப்பும் முத்திரையர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடன சபாபதி தொண்டமாநத்தம் ரங்கசாமிநகரில் புதிதாக வீடு கட்டி குடியேறினார். தினமும் காலை தனது மகன்களை முத்தரையர்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை அவர் தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்து வந்தார்.

ஊசுட்டேரி- பொறையூர் சாலை வளைவில் பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக செம்மண் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் நடன சபாபதி மற்றும் ஜீவா, துவாரகேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். லாரியின் பின் சக்கரம் ஜீவா, துவாரகேஷ் ஆகியோர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். நடன சபாபதி லேசான காயமடைந்தார். மகன்கள் 2 பேரின் உடலை பார்த்ததும் நடன சபாபதி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பொறையூர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் லாரி டிரைவரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் லாரி டிரைவரின் கால் முறிந்தது. மேலும் லாரியின் கண்ணாடியை கல் வீசி அடித்து உடைத்தனர். மேலும் அங்கு நடுரோட்டில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

செம்மண் மற்றும் மணல் ஏற்றி வரும் லாரிகள் இதுபோன்று தொடர்ந்து அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடைபெற்றது. 

Read Entire Article