புதுச்சேரியில் ஜிப்மரை தொடர்ந்து 2வது நாளாக பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 month ago 7

புதுச்சேரி, அக். 10: புதுவை பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் வந்தது. இதையடுத்து கோரிமேடு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் 4 மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர். அப்போது அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தின் துணை தூதர் லிஸ் டால்போட் பார்ரேவுக்கு நேற்று காலை 10.40 மணியளவில் ஒரு இ-மெயில் வந்துள்ளது. அந்த இ-மெயிலில் புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே துணை தூதரகர் லிஸ் டால்போட் பார்ரே பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சீனியர் எஸ்பி கலைவாணன், கிழக்கு எஸ்பி லட்சுமி சவுஜன்யா தலைமையில் சிக்மா செக்கியூரிட்டி எஸ்பி ரகுநாயகம் மற்றும் பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் பிரெஞ்சு தூதரகத்துக்கு சென்றனர்.

முதற்கட்டமாக பிரெஞ்சு தூதரகத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடியாக சோதனை செய்தனர். பின்னர் பிரெஞ்சு தூதரகத்துக்கு உள்ளே சென்று சோதனை செய்ய அனுமதி கிடைக்க சிறிது நேரம் காலதாமதம் ஆனது. பின்னர் அனுமதி கிடைத்ததுடன் மோப்ப நாய் உடன் போலீசார் உள்ளே சென்று அதிரடியாக சோதனை செய்தனர். இச்சோதனையின் போது பிரெஞ்சு தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரிகார்டு அமைத்து கயிறு கட்டி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிரெஞ்சுதூதரகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அனைவரையும் சோதனை செய்து, போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சோதனை தொடர்ந்து மதியம் 1.30 மணி வரை நடந்தது. இதில் அப்பகுதியில் எந்தவித வெடிபொருட்களும் இல்லை. இது மக்களை அச்சுறுத்த விடுக்கப்பட்ட மிரட்டல் என்பது தெரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.புதுவையில் தொடர்ந்து 2வது நாளாக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் புதுவை மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இ-மெயில் மிரட்டல் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பண்டாரிநாதன் என்பவரின் இ-மெயிலில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் ஜிப்மரை தொடர்ந்து 2வது நாளாக பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article