புதுச்சேரி, பிப். 16: புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 வாலிபர்கள் கொலை வழக்கில் டி.வி. நகர் ரவுடி சத்யா, சிறுவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பகீர் தகவல் கிடைத்துள்ளது. புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் 2 பேர் தலை, முகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டும், மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி நிலையில் கிடப்பதையும் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசார் உயிருக்கு போராடிய நபரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த நபரும் உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள் வந்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்டது புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்த பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரசி (19), ஜே.ஜே. நகரை சேர்ந்த ஆதி (20) மற்றும் திடீர் நகரை சேர்ந்த தேவா (எ) பன்னீர்தேவா (21) என்பது தெரியவந்தது. கொலை தொடர்பாக ரசியின் உறவினரான ரோமார்க் என்பவர் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து வலைவீசி தேடினர். 45 அடி சாலை- ரெயின்போ நகர் சந்திப்பு உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது 3 பைக்கில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ரசி, தேவா மற்றும் ஆதி ஆகியோரை மடக்கி பிடித்து அழைத்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதன்மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் டி.வி. நகரை சேர்ந்த ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து டி.வி. நகரை சேர்ந்த ரவுடி சத்யா (30), ரோடியர்பேட் சக்திவேல் (21), சரண் (20), வம்பாகீரப்பாளையம் வெங்கடேசன் (22), ஆட்டுபட்டி சாரதி (22), விஷ்ணு (21), சோலை நகரை சேர்ந்த ரவிந்திரகுமார் (19), வாணரப்பேட் சஞ்சீவ் (22), டி.வி. நகரை சேர்ந்த காமேஷ் (20) மற்றும் சிறுவன் ஆகிய 10 பேரை தனிப்படை போலீசார் நேற்று சென்னை அருகே கைது செய்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் டி.வி.நகர் ரவுடி சத்யாவுக்கும், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்துள்ளது.
இதனிடைேய அஸ்வின் கும்பலுடன் ரசி மற்றும் தேவா ஆகியோர் இணைந்து சத்யாவை கொலை செய்ய நோட்டமிட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில் சம்பத்தன்று ரசி, தேவா மற்றும் ஆதி ஆகியோர் சத்யாவை நோட்டமிட சென்றபோது, சத்யா காதலர் தினத்தை கொண்டாட அவரது கூட்டாளிகளுடன் வம்பாகீரப்பாளையம் பகுதியில் இருந்துள்ளார். அப்போது ரசி, தேவா மற்றும் ஆதி ஆகியோர் அங்கு வந்திருப்பதை பார்த்து, சத்யா மற்றும் கூட்டாளிகள் அவரை சமாதானம் பேசுவதாக கூறி, ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவுக்கு அழைத்து சென்று பேசியுள்ளனர்.
அப்போது சத்யாவிடம் ஆயுதம் இல்லாததால் உடனே ஆட்டுப்பட்டியில் அவரது கூட்டாளிகளை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து கத்தியுடன் வந்த கூட்டாளிகள் உடனே ரசி, தேவா மற்றும் ஆதியை வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்த அனைவரும் தப்பிச் சென்று போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் முழு விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிறுவன் உட்பட 10 பேரிடம் தனித் தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
3 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
கொலை செய்யப்பட்ட ரசி, தேவா மற்றும் ஆதி ஆகியோரது உடல்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆதியின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படடது. ரசி மற்றும் தேவாவின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்தபிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனைக்கு ரசியின் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் 70க்கும் மேற்பட்டோர் பைக்கில் திரண்டனர். பின்னர் உடல் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்சை, இருசக்கர வாகனத்தில் அனைவரும் பின்தொடர்ந்து சென்றனர்.
The post புதுச்சேரி ரெயின்போ நகரில் நடந்த 3 பேர் கொலையில் ரவுடி சத்யா, சிறுவன் உட்பட 10 பேர் கைது மேலும் 3 பேருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.