புதுச்சேரி: "புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரியும் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ, வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந் நிலையில், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் ரவிக்குமார் என்பவருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அதுபற்றி அவர் கூறியதாவது: ''வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக ரவிக்குமார் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டை சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அதனைத் தொடர்ந்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில், ரவிக்குமார், அவரது மனைவி பிரியதர்ஷினி, அவரது மாமியார் குமுதம் ஆகியோர் பெயர்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவர் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.