புதுச்சேரி பகுதியில் உள்ள சிங்கிரிகுடி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்த தாசில்தார்

1 week ago 5

*வருமானத்தை பெருக்க செயல் திட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தாசில்தார் பிரித்வி நேற்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் புதுச்சேரிக்கு உட்பட்ட டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ளன. மேலும், கோயிலின் கட்டுப்பாட்டில் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயில், முத்தாலம்மன் கோயில், ஐயனார் கோயில் ஆகியவை உள்ளன. இக்கோயிலுக்கு நிர்வாகியாக புதுச்சேரி தாலுகா தாசில்தார் பிரித்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள சிங்கிரிகுடி கோயிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக, டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று குத்தகைதாரர்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் பயன்பாடின்றி கிடக்கும் நிலங்களை பார்வையிட்டார்.

இதுகுறித்து தாசில்தார் பிரித்வி கூறுகையில், சிங்கிரிகுடி கோயிலுக்கு சொந்தமாக புதுச்சேரிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நிலங்கள் கோயில் நிர்வாகத்தின் கீழ் குத்தகைதாரர்களால் விவசாயம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பயன்பாடு இன்றி கிடக்கும் நிலங்களில் திருமணம் மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் கோயில் வருமானத்தை பெருக்கலாம். அதே சமயம், கோயில் நிலங்களையும் பாதுகாக்க முடியும். எனவே, கோயில் நிலத்தை பாதுகாக்க விரைவில் ஒரு விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்படும். இதன் மூலம் கோயில் வருவாயையும் அதிகரிக்க முடியும் என்றார்.

The post புதுச்சேரி பகுதியில் உள்ள சிங்கிரிகுடி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்த தாசில்தார் appeared first on Dinakaran.

Read Entire Article