புதுச்சேரி நகர பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர வாலிபர் அதிரடி கைது முக்கிய குற்றவாளிக்கு வலை

3 months ago 30

புதுச்சேரி, செப். 29: புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திரா வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி நாராசைதன்யா உத்தரவின்பேரில் வடக்கு எஸ்பி வீரவல்லவன் மேற்பார்வையின்கீழ், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த புதுசாரம், ராதாகிருஷ்ணன் நகர், ரெட்டியார்பாளையம் தியாகுபிள்ளை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமாராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தினர்.

நேற்று முன்தினம் லட்சுமி நகர் மற்றும் மகாத்மா நகர் சந்திப்பில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது, அந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த துவுரு சந்தோஷ் குமார் (எ) பாபு (36) என்பதும், ஆந்திராவை சேர்ந்த தனது நண்பரான சையது பாஷாவுடன் இணைந்து புதுச்சேரி நகர பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் முத்தியால்பேட்டை, எல்லைபிள்ளைச்சாவடி போன்ற பகுதிகளில் பைக் திருடியதும், தென்றல் நகர், கவிக்குயில் நகர், ரெட்டியார்பாளையம், ராதாகிருஷ்ணன் நகரில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 2 பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை மாஜிஸ்திரேட் முன் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசாரை கண்டதும் சந்தோஷ்குமார் தப்பி ஓடியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிந்தது. இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வடக்கு எஸ்பி வீரவல்லவன் கூறுகையில், புதுவையின் பல்வேறு இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுட 2 பேரும், வார இறுதிநாட்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆந்திராவிலிருந்து புதுவைக்கு வந்து வெவ்வேறு இடங்களில் பைக் திருடி செயின்களை பறித்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆந்திராவை சேர்ந்த சையது பாஷா மீது கர்நாடகா, ஆந்திரா, தமிழக மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள சையது பாஷாவை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

The post புதுச்சேரி நகர பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர வாலிபர் அதிரடி கைது முக்கிய குற்றவாளிக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article