புதுச்சேரி, பிப். 7: புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35வது மலர், காய்கனி கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு இன்று மாலை தொடங்கி வைக்கின்றனர். புதுச்சேரியில் வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு 35வது மலர், காய்கனி கண்காட்சி இன்று மாலை தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். விழாவில் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மலர் கண்காட்சியில் புதுவை அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக மலர்களால் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வீரிய காய்கறிகளின் ரகங்கள், வீரிய கனிகளின் ரகங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், மலர் ரங்கோலி, தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், பிரதான தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், இசை நடன நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைகளுக்காக சிறுவர் உல்லாச ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த 35வது மலர், காய்கனி கண்காட்சி 7ம் தேதி (இன்று) முதல் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையும், 8ம், 9ம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்துள்ளனர்.
வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மலர் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்த 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் பழைய பேருந்து நிலையம், ஒதியஞ்சாலை நகராட்சி வளாகத்தில் நிறுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் (ஓட்டுனர்கள்) பழைய துறைமுக பகுதியில் நிறுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் (சுய ஓட்டுனர்) அண்ணா திடலில் நிறுத்த வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லும் வகையில் கியூஆர் குறியீடு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
The post புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35வது மலர், காய்கனி கண்காட்சி இன்று தொடங்குகிறது: 9ம் தேதி வரை நடைபெறும் appeared first on Dinakaran.