புதுக்கோட்டையில் 26 ஆண்டுகளுக்கு பின் அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

2 weeks ago 4

*பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் 26 ஆண்டுகளுக்கு பின் அரசு கல்லூரி மாணவர்களின் சந்திப்பு நடந்தது. இதில் மாணவர்கள் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்.புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் படித்த பலரும் பல்வேறு துறையில் சாதித்துள்ளனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் கடந்த 1995 முதல் 1998ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில் மாலை நேர கல்லூரியில் பயின்ற 62 மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டு வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்து கடந்த மூன்று மாத காலமாக தங்களுடன் படித்த நண்பர்களை அந்த குழுவில் சிரமப்பட்டு இணைத்து நேற்று சம்பந்தப்பட்ட கல்லூரியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பை நடத்தினர்.

இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 62 முன்னாள் மாணவர்கள் தங்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வருகை தந்த நிலையில் கல்லூரி நுழைவு வாயிலில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவிகள் 26 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது தோழிகளை பார்த்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தனர். மேலும் மாணவர்கள் ஒரு சிலர் ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியாததால் அவர்களை சந்தித்து பெயர் என்ன என்று கேட்டு பின்னர் அவர்களை தெரிந்து கொண்டு ஆரத் தழுவி மகிழ்ந்தனர்.

பின்னர் 62 முன்னாள் மாணவர்களும் தாங்கள் படித்த கல்லூரி வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களாகவே மாறி அங்கு உள்ள மேஜையில் அமர்ந்து தங்களது பேராசிரியர்கள் தங்களுக்கு எப்படி பாடம் எடுத்தார்கள் என்பதை முன்னாள் மாணவர்கள் பேராசிரியர்கள் போல பாடம் எடுத்து அசத்தி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் வகுப்பறைக்கு கல்லூரி மாணவர்கள் வரும்பொழுது எவ்வாறு வருகை பதிவேடுக்கு பெயர் சொல்லி அழைப்பார்களோ அதே போல் ஒவ்வொருத்தவரையும் பெயர் சொல்லி அழைத்து மாணவர்களைப் போல உள்ளேன் ஐயா என்று கூறியும் அவர்களது பழமையான நினைவுகளை நினைவுக்கு கொண்டு வந்தனர். மேலும் முன்னாள் மாணவர்கள் தங்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வருகை தந்த நிலையில் அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தும் வீடியோ எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அப்போது முன்னாள் மாணவர்கள் கூறுகையில்: கல்லூரி கால நிகழ்வு மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை, கடந்த மூன்று மாத காலமாக வாட்ஸப் குழுவை ஆரம்பித்து அதில் நாங்கள் தங்களுடைய நண்பர்களை சேர்த்தோம் மூன்று மாதம் பட்ட கஷ்டத்திற்கு தற்பொழுது பலன் கிடைக்கும் வகையில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு, தற்போது நாங்கள் திருமணமாகி குடும்பத்தினருடன் இருந்தாலும் இந்த ஒரு நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும் முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் முன்னாள் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினுடன் ஒன்று சேர்ந்து கல்லூரி மைதானத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பிரியா விடை கொடுத்து சென்றனர்.

The post புதுக்கோட்டையில் 26 ஆண்டுகளுக்கு பின் அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article