புதுக்கோட்டை,செப்.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் வேளாண்மை விற்பனை கிடங்கில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கி உள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்தி இடுபொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் அருணா தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித் திட்டத்தின்கீழ் (PMKISAN) 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் 1.2.2019க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000 மூன்று தவணைகளாக ஏப்ரல் முதல் ஜூலை வரை, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை, டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து DBT Mode-ற்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3889 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். மேலும் விவசாயிகள் விரைந்து e-KYC யினை பதிவேற்றம் செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. PMKISAN திட்டத்தில் கடைசி தவணையானது e-KYC பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 1378 பயனாளிகள் e-KYC பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். PMKISAN தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கிராமங்கள் தோறும் கிராம பொறுப்பு அலுவலர்
நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கிராமபொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணைத் தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டு அதனை நிவர்த்தி செய்துகொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இதற்கென சிறப்பு உதவிமையம் பிரதி வெள்ளி தோறும் செயல்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணமில்லா பரிவர்த்தணை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் உள்ள முதன்மை வேளாண்மை விற்பனை கிடங்கில் பணமில்லா பரிவர்த்தணை மேற்கொள்ளும் வகையில் POS இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இடுபொருட்களை வாங்க செல்லும் பொழுது தாங்கள் செலுத்தும் பங்குதொகையினை QR Code மூலமாகவோ, UPI அல்லது ATM அட்டை ஆகியவற்றை உபயோகப்படுத்தி இடுபொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், வேளாண்மையில் இயற்கை வேளாண் இடுபொருட்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதன் மூலம் மண் வளத்தைப்பேணிகாத்து, வேதிப்பொருட்களின் எச்சம் இல்லாத வேளாண்விளை பொருட்களை உற்பத்தி செய்து மக்கள் நலம் காக்கும்விதமாக, “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இயற்கையிலேயே பூச்சிக்கொல்லிபண்புடைய ஆடாதொடா, நொச்சி செடிகளை தரிசுநிலங்களிலும் வயல் வரப்புகளிலும் நடவு செய்து பரவலாக்கம் செய்யப்படவுள்ளது. ஆடாதொடா, நொச்சி செடிகளின் இலைகளின் சாற்றைவயல்களிலும் இலைகளை அப்படியே தானிய சேமிப்புகலன்களிலும் பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். மேலும், மருத்துவ குணம் வாய்ந்த இந்த செடிகளை வீட்டின் அருகிலும் வளர்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடாதொடா, நொச்சி நடவு கன்றுகள் அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பிட தயார் நிலையில் உள்ளன. இந்த நடவு கன்றுகள் வேளாண்மை விரிவாக்கமையங்களிலிருந்து விவசாயிகளுக்கும் விநியோகம்செய்யப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 50 நடவு கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உழவர் செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
மேலும், இத்திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டு மண்வளத்தைமேம்படுத்தி பயிர் மகசூலை அதிகப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நுண்ணுயிர் உரங்கள் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அசோஸ்பைரில்லம் (நெல்) அசோஸ்பைரில்லம் (இதர) ரைசோபியம் (கடலை) ரைசோபியம் (பயறு) துத்தநாகபாக்டீரியா மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியன விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 13 வட்டாரங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.உழவர் செயலி, வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் உழவர் செயலியினை பயன்படுத்தி மானியத் திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன் பதிவுசெய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் வேளாண் விற்பனை கிடங்கில் பணமில்லா பரிவர்த்தணை : கியூஆர் கோர்டு மூலம் இடுபொருட்கள் பெறலாம் appeared first on Dinakaran.