
புதுக்கோட்டை,
அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
இதையடுத்து கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, தினமும் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும் மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி நார்த்தாமலை தேர் திருவிழா நடப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும், தேர்வுகள் அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.