அறந்தாங்கி, நவ.28: புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார பகுதி மற்றும் கடலோர பகுதியான கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, ஆர். புதுப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவழமை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் வடகிழக்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மற்றும் மழையின்காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் ஜெகதாப்பட்டினம் துறைமுகம் அருகே கருவாடு, கச்சபொடிகளை வெயிலில் காய வைக்க அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள களத்தில் தார்பாய்களை மூடி கருவாடு, கச்சபொடிகளை வைத்துள்ளனர். ஆனால் கருவாடு, கச்சபொடிகளை வெயிலில் காய வைக்கும் களத்திலேயே தண்ணீர் தேங்கும் அளவிற்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கருவாடுகள், கச்சபொடிகள் கெட்டுபோய் உள்ளது. இதனால் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஆர். பதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் தொடர் மழை காரணத்தால் லட்சக்கணக்கான கருவாடு, கச்சபொடிகள் சேதமாகி உள்ளது. இதனால் கருவாடு, கச்சபொடி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
The post புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் தொடர்மழை மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்: லட்சக்கணக்கான கருவாடுகள் சேதம் appeared first on Dinakaran.