புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்

3 days ago 2

* சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

* இரண்டு நாட்களில் குடிநீர் வருவதற்கு ஏற்பாடு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கைகுறிச்சியில் குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய நிலையில் கைகுறிச்சி ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வர நிலையில் கைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கக்கூடிய நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் வராததால் அவதி அடைந்து வந்துள்ளனர்.

மேலும் இது குறித்து புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை திடீரென அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கைகுறிச்சியில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பள்ளி கல்லூரி வாகனங்கள், பேருந்துகள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கி நடந்து சென்றனர். மேலும் 11-ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்வுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்களின் நலம் கருதி மறியல் போராட்டத்தை கைவிட்டு சாலை ஓரத்திலேயே குவிந்து நின்றனர். இதனையடுத்த சம்பவ இடத்திற்குச் சென்ற டவுன் டிஎஸ்பி அப்துல் ரகுமான் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் குடிநீர் வருவதற்கு ஏற்பாடு செய்கின்றோம் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article