புதுக்கோட்டை பூவை மாநகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் புல்டோசர் கருவி கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை

4 weeks ago 5

* மாநில அளவில் 3வது இடம்

* பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை பூவை மாநகர் அரசு பள்ளி மாணவர் ஸ்மார்ட் புல்டோசர் கருவி கண்டுபிடித்து மாநிலத்தில் 3வது இடத்தை பெற்றார். அவரை கலெக்டர் அருணா பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ஸ்மார்ட் புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் அருணா, காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் அறிவியல் புத்தாக்கத் திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி இன்றையதினம் மாநில அளவில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் 2.0 மூலம் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில், பூவை மாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் அன்பரசன், ஐயப்பன் ஆகியோர் அறிவியல் சார்ந்த புதுமை கண்டுபிடிப்பான, எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கக்கூடிய ஸ்மார்ட் புல்டோசர் கருவியினை கண்டுபிடித்தமைக்கு மாநில அளவில் 3ம் இடம் பிடித்தமைக்காக ரூ.10,000-க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவர்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாதாந்திர மாவட்டக் கல்வி ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோர்களின் பணி முன்னேற்றம் குறித்தும், மாணவர்களின் தேர்ச்சி விகித பகுப்பாய்வுகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி), செந்தில் (தொடக்கக் கல்வி), பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, குருமாரிமுத்து, இளையராஜா, பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை பூவை மாநகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் புல்டோசர் கருவி கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article