புதுகை அருகே 50 பவுன் கொள்ளை வழக்கில் திண்டுக்கல், மதுரையை சேர்ந்த 2 பேர் கைது

3 months ago 11

*தப்பி ஓட முயன்ற ஒருவனின் கை, கால் முறிவு

கறம்பக்குடி : புதுக்கோட்டை அருகே மாமியார், மருமகளை கட்டிப்போட்டு 50 பவுன் கொள்ளையடித்த வழக்கில் திண்டுக்கல், மதுரையை சேர்ந்த 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் தப்பி ஓட முயன்ற ஒருவனின் கை, கால் முறிந்தது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பச்சைநாயக்கன்குளத்தை சேர்ந்தவர் ராஜசேகர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி பாக்கியசெல்வி(62). இவர்களது மகன் அய்யப்பன். வெளிநாட்டில் வேலைபார்க்கிறார்.

இவரது மனைவி தங்கலட்சுமி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 9ம் தேதி அதிகாலை 2 மணி அளவில், இவர்களது வீட்டுக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள், பாக்கியசெல்வி, தங்கலட்சுமியை கட்டிப்போட்டு 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார், கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி ஆர்ச் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த 2 பேரை போலீசார் மறித்தும் அவர்கள் நிற்காமல் பைக்கில் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இருவரையும் கறம்பக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திண்டுக்கல் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜசேகர்(31), மதுரை சம்மட்டிபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(34) என்பதும், ஒரு கொலை வழக்கில் மகேந்திரன் சிறையில் இருந்தபோது அங்கு ஏற்கனவே திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த ராஜசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் நண்பர்களான இருவரும், வெளியில் வந்த பின்னரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன், கறம்பக்குடியில் பாக்கியசெல்வி வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும், கடந்த 2 மாதங்களுக்கு முன் மருதகன்கோன்விடுதியில் வீடுபுகுந்து 4பவுன் நகைகள், செல்போனை கொள்ளையடித்துள்ளனர்.

பாக்கியலட்சுமி வீட்டில் கொள்ளையடித்த பின்னர் இருவரும், திருச்சி பெட்ைடவாத்தலையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து நிரந்தரமாக அங்கு தங்கியுள்ளனர். அங்கு நகைகளை வைத்திருந்ததுடன், சில நகைகளை விற்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர். பின்னர் மீண்டும் திருடுவதற்காக கறம்பக்குடி பகுதிக்கு நோட்டமிட பைக்கில் வந்தபோது சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் ைகது செய்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் தனிப்படை போலீசார், கொள்ளையடித்த நகைகளை மீட்க அவர்கள் தங்கியிருந்த லாட்ஜிக்கு இருவரையும் நேற்றுமுன்தினம் இரவு அழைத்து வந்தனர். அங்கு 54 பவுன் நகைகளை கைப்பற்றிய பின்னர், மீண்டும் காவல் நிலையத்துக்கு போலீஸ் ஜீப்பில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி பெரியாற்று பாலம் அருகே வந்தபோது ராஜசேகர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து போலீசார், அவரை வாகனத்தில் இருந்த இறக்கியபோது போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு ராஜசேகர் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச்சென்றபோது பெரியாற்று பாலத்திலிருந்து குதித்து தப்பி ஓட முயன்றபோது ராஜசேகருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருடும் வீடுகளில் கத்திமுனையில் பலாத்காரம்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொள்ளை வழக்கில் கைதான ராஜசேகர் பூட்டி கிடக்கும் வீடுகள், தனியாக பெண்கள் உள்ள வீடுகளை திருடுவதற்கு 2 நாட்களுக்கு முன் நோட்டமிடுவார். பின்னர் நேரம் பார்த்து திருட்டில் ஈடுபடுவாராம். அப்படி கொள்ளையடித்து வரும் நகைகளை உடனே விற்காமல், லாட்ஜ்களில் தங்கியிருந்து சில நாட்களுக்கு பின் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கொள்ளையடிக்க செல்லும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு திருட்டில் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளார். ராஜசேகரன் மீது மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்பட தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட கொள்ளை, பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் மகேந்திரன் மீது கொலை, திருட்டு வழக்குகள் உள்ளது என்றனர்.

The post புதுகை அருகே 50 பவுன் கொள்ளை வழக்கில் திண்டுக்கல், மதுரையை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article