புது நம்பிக்கை

3 months ago 9

எளிய மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வு பெற அவர்கள் நம்பியுள்ள ஒரே இடம் அரசு அலுவலகங்கள்தான். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மக்களின் அடிப்படை பொது பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த மாவட்டம் முழுவதுமிருந்து இந்தநாளை நம்பி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு கலெக்டர்கள் செவி சாய்த்து துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகின்றனர். இதனால் இந்தநாள் எளிய மக்களின் நீதி நாளாகவே விளங்கி வருகிறது.

கடந்த காலங்களில் வெறும் சம்பிரதாய முகாமாகவே இவை நடத்தப்பட்டதாக எளிய மக்கள் குமுறி வந்தனர். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பொறுப்பேற்கும் முன்பே பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றவர். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் மக்கள் குறை தீர்ப்பு விவகாரத்திற்கு அவர் கூடுதல் கவனம் செலுத்தினார். மாவட்ட அளவிலும், முதல்வரின் தனி கவனத்திற்கென தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தங்களுக்கு தீர்வு வேண்டி அரசு அலுவலகங்களையும், முதல்வரின் தனிப்பிரிவையும் நாடுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இதேபோல் ஆன்லைனிலும் மனுக்கள் பெறப்படுகின்றன. இதனால் மாவட்டங்களில் தீர்வு காண வேண்டிய மனுக்கள் மலைபோல் குவிந்துள்ளன. இவ்வாறு மனுக்கள் குவிந்தாலும் அவற்றிற்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு கெடு விதித்துள்ளது. மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்ட உடனோ அல்லது அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ மனு பெறப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரரின் கோரிக்கையானது பெறப்பட்ட நாளில் இருந்து, அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் அந்த மனுக்கள் தீர்க்கப்பட வேண்டும். கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை அந்த மனுவில் எழுத வேண்டும்.

அரசுத் துறை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்திருந்தால், அந்த மனு மீதான நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சில காரணங்களுக்காக மனு மீதான தீர்வுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், யார் மனு அளித்தாரோ அவருக்கு, கடிதம் மூலம் தீர்வு காண எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க முடியாத சூழல் கண்டறியப்பட்டால், அதுகுறித்த சரியான காரணத்தையும் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சாமானியர்களின் கவலைகள் தீர்ந்தால் மட்டுமே அரசின் சாதனை பயணம் ெதாடர முடியும் என்பது திராவிட மாடல் அரசின் தாரக மந்திரமாகவே உள்ளது. இதனால்தான் மகளிர் இலவச பஸ் பயணம் துவங்கி பல்வேறு திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. மனு நீதி தவறாத வழி வந்த மக்களின் அரசாக செயல்படும் தமிழக அரசு மக்களின் மனுக்களை ஒரு மாதத்திற்குள் தீர்க்க வேண்டுனெ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது எளியோருக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது.

The post புது நம்பிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article