ஜார்ஜ் டவுன்,
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தின் முதல் கட்டமாக, நைஜீரியா நாட்டிற்கு சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர், பிரேசில் நாட்டிற்கு சென்று அங்கு நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கயானா நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனுக்கு சென்றார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி சபையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர். பின்னர் அந்நாட்டு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பிரமாண்டமான முறையில் வரவேற்புக்கு அளித்த அதிபர் இர்பான் அலிக்கு நன்றி. 56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். கயானாவுடன் எனக்கு தனிப்பட்ட தொடர்பு உள்ளது. 24 ஆண்டுகளுக்கு முன், இங்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று, பிரதமராக இங்கு வரும் பாக்கியம் கிடைத்துள்ளது.
அதிபர் இர்பான் அலிக்கும் இந்தியாவுடன் சிறப்பான உறவு உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 'பிரவாசி பாரதிய திவாஸ்' நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவரது வருகை இந்தியா-கயானா இடையிலான ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல எங்களுக்கு உத்வேகம் அளித்தது.
இந்தியா மற்றும் கயானா இடையிலான உறவுகளை வலுப்படுத்த பல புதிய முன்னெடுப்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கயானாவில் திறன் மேம்பாடு, உணவு உள்ளிட்ட துறைகளுக்கு இந்தியா முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. கடந்த ஆண்டு கயானாவுக்கு தினை பயிர்களை வழங்கி உணவு பாதுகாப்புக்கு இந்தியா உதவியது. இதே போல் மற்ற பயிர்களின் சாகுபடிக்கும் உதவுவோம். இன்று கையெழுத்தான விவசாய புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது முயற்சிகளுக்கு வலு சேர்க்கும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.