பும்ரா விவகாரம்: தொடரை விட லார்ட்ஸ் போட்டி முக்கியமா..? கம்பீரை சாடிய இலங்கை முன்னாள் வீரர்

7 hours ago 5

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் 3-வது டெஸ்டில் ஆடுவார் என கேப்டன் கில் தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் வாய்ப்பு பெற்றார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், பஷீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளதால் இந்த முக்கியமான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. இது பலரது மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இப்போட்டியில் ஓய்வெடுக்கும் பும்ரா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 3வது போட்டியில் விளையாடுவார் என்று கேப்டன் கில் தெரிவித்தார்.

இந்நிலையில் தொடரை வெல்வதை விட லார்ட்ஸில் நடைபெறும் 3வது போட்டி முக்கியமா? என்று இலங்கை முன்னாள் வீரரான சங்கக்காரா இந்திய தலைமை பயிற்சியாளரான கம்பீரை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த முடிவு எப்படி எடுக்கப்படுகிறது, யார் அதை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது?. அது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் விவாதிக்கப்பட்ட பின் எடுக்கப்படுகிறதா? அல்லது இந்தத் தொடரை விட லார்ட்ஸ் போட்டி முக்கியம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா? இந்த போட்டியில் கூட முதல் நாளில் இந்தியா நன்றாக விளையாடியிருந்தாலும் வெற்றி இங்கிலாந்தின் பக்கமே சாய்ந்திருக்கிறது.

எனவே பும்ராவிடம் பயிற்சியாளர், 'ஆம் உங்களை 3, 5வது போட்டிகளில் விளையாட வைக்க நினைத்தோம். ஆனால் இப்போது 2, 3வது போட்டிகளில் விளையாடுங்கள், ஏனெனில் 3வது போட்டிக்கு முன் நிறைய இடைவெளி இருக்கிறது' என்று சொல்லியிருக்க வேண்டும்.

இது கடந்த போட்டிக்கான எதிர்வினை மட்டுமல்ல. கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் நீங்கள் 7 தோல்வி 1 வெற்றி 1 டிராவை சந்தித்துள்ளீர்கள். எனவே நீங்கள் இறக்கி வைப்பதற்கும் மாற்றுவதற்கும் நிறைய பாரம் இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் மாற்றங்களை செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article