
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ரூ.1,050 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்த 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தையடுத்து, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளநிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய தோற்றத்தில் இருக்கும் பிரபாசின் புகைப்படத்தை வெளியிட்டு, 'தி ராஜா சாப்' படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தைத்தொடர்ந்து பிரபாஸ், சலார் 2, ஸ்பிரிட், 'சீதாராமம்' பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.