
சென்னை,
அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பிய இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் சினிமா கேரியரிலேயே அதிக வசூலை அள்ளிய சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் படைத்தது. மேலும் 'குட் பேட் அக்லி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 'ஏகே 64' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என்று ஹிண்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அதே கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'ஏகே 64' திரைப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 அக்டோபர் மாதம் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகரும், ரேஸருமான அஜித், "என் புதிய படத்தை 2025 நவம்பரில் தொடங்க இருக்கிறேன். அது 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும்" என்று அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் நடிகர் பாலையாவிற்கு பிடித்ததால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை நேரில் அழைத்து அவரது இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.