திருவனந்தபுரம்: புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
வெளியேறும் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 19ம் தேதி முடிவடைந்துவிட்டது. அந்த வகையில், வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த ஒன்றிய அரசின் முயற்சிகளை ஆளும் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியும் எதிர்த்தது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியும் கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு கடந்த சனிக்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் அடுத்து கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி பழைய சட்டத்தின் கீழ் அரசு ஏற்கனவே தொடங்கிய நிலையில், புதிய சட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு நடைமுறைகளைத் தொடங்க உள்ளது.
The post புதிய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளா..!! appeared first on Dinakaran.