‘‘நகரின் புதிய கட்சியில் மாணவர் அணியில் பொறுப்பு வாங்கித் தருவதாக சொல்லி இளசுகளிடம் மாவட்ட நிர்வாகிகள் கல்லாகட்டத் தொடங்கிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நடிகர் ஒருத்தர் புதுசா துவங்கி இருக்கும் கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணி வேகமாக நடந்து வருதாம்.. எல்லா மாவட்டத்திலும் இளைஞர்களை குறிவச்சு இவங்க காய்களை நகர்த்தி வராங்க.. கோவையிலும் இந்த பணி தீவிரமா நடந்துகிட்டு வருது..
இதுல கிழக்கு மாவட்ட தலைவர், மாணவரணி தலைவர் இரண்டு பேரும் சேர்ந்து கட்சியில் சேர்ந்தால் மாவட்ட பொறுப்பு வாங்கி தருவதாக கூறி, ரசிகர்களிடம் ரூ.10 ஆயிரமும், மாணவரணியில் பொறுப்பு வாங்கி தர ரூ.5 ஆயிரமும் வசூலித்து வர்றாங்களாம்.. இவங்க பேச்சை நம்பி இளசுகள் பலர் காசு கொடுத்து இருக்காங்க.. இப்போ அவங்க நமக்கு பொறுப்பு வருமா, வராதானு ஏக்கத்தில் இருக்காங்க. தவிர, ஆட்கள் சேர்க்க பணம் கேட்டு வரும் விவகாரம் கட்சியில் இருக்கும் மத்தவங்களுக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்..
கல்லா கட்டும் விஷயத்தை தெரிந்து கொண்ட மற்ற நிர்வாகிகளும் நாமும் இதே பாணியில கல்லா கட்டலாம்னு பேசிட்டு இருக்காங்களாம்.. இதுமட்டுமல்லாம மாவட்ட தலைவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக இருக்கிறதால ரசிகர்களை கட்டாயப்படுத்தி பாலிசி போட சொல்லி டார்ச்சர் கொடுக்கிறாராம்.. கட்சி மேலிடம் இதுபற்றி விசாரிக்குமானு, இளைஞர்கள் பலர் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆக்டரின் நியூ பார்ட்டியில் சேர தமிழர் பார்ட்டிகளுக்கு மட்டும் ஒரு கண்டிஷன் போட்டிருக்காங்களாேமே தெரியுமா… எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆக்டரின் நியூ பார்ட்டியில் சேர்வதற்கு இலை, தாமரை, மாம்பழம் கட்சிகளை சேர்ந்த சில முன்னாள் நிர்வாகிகள் காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்களாம்.. இதேபோல் தேனிக்காரர், குக்கர் பார்ட்டியின் ஆதரவாளர்கள் சிலரும் ஆக்டரின் பேன் பெடரேஷனை அணுகி இருக்காங்களாம்.. ஆனால் அவர்கள் யாருக்கும் பெடரேஷன் நிர்வாகிகள் பிடி கொடுக்காமல் இருக்காங்களாம்.. அதேநேரத்தில் தமிழர் என்று கோஷமிடுவோரின் தம்பிகளுக்கு மட்டும் சிக்னல் கிடைச்சிருக்காம்.. ஆனால் ஒரு கண்டிஷன் மட்டும் போட்டிருக்காங்களாம்..
ஆக்டரின் பார்ட்டியில் நீங்கள் சேரவேண்டும் என்றால் தமிழர் பார்ட்டியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவேண்டும்.. அதன்பிறகுதான் எங்கள் பார்ட்டியில் இணையவேண்டும் என்பது தான் அந்த கண்டிஷனாம்.. மேங்கோ டிஸ்டிரிக்டில் தொடர்ச்சியாக மைக் பார்ட்டிகள் வெளியேறுவதற்கு இந்த கண்டிஷன் தான் காரணமாம்.. ஏற்கனவே 20ம்தேதி ஒரு இணைப்பு விழாவை நடத்த பிளான் போட்டிருந்த ஆக்டரின் பார்ட்டி, இது போன்றவர்களுக்காக டேட்ைட கொஞ்சம் சேஞ்ச் பண்ணி இருக்காங்களாம்..
விரைவில் ஒட்டு மொத்த தம்பிகளும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கும் ஆயத்தமாகிகிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தம்பி விடுதலை மகிழ்ச்சி என்றாலும் கட்சிக்காரங்க வரவேற்க வராததால் ஆதரவாளர்களிடம் புலம்பி தவிக்கிறாராமே பலாப்பழக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் பிக் பாண்ட் நகருக்கு அருகே உள்ள மலைக்கோயில் பூசாரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு பலாப்பழக்காரரின் உடன்பிறந்த சகோதரர் காரணமென கூறி, அவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தீவிர விசாரணைக்கு பின், பூட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது. வழக்கில் இருந்து தம்பி விடுபட்டால், இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலைக்கட்சி நிர்வாகிகள் பலர் தன்னை சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பார்கள் என பலாப்பழக்காரர் எதிர்பார்த்திருந்தாராம்.. காரணம், பூசாரி தற்கொலை வழக்கால் பலாப்பழக்காரரின் இமேஜ் கடுமையாக டேமேஜ் ஆனதாம்.. மாவட்டத்தில் பலர் கட்சி மாறிட்டாங்க.. அவர் குடியிருக்கும் பிக் பாண்ட் தொகுதி சட்டமன்ற தேர்தலிலும் இலைக்கட்சி தோல்வியை தழுவியது.
இந்த சூழலில், தீர்ப்பில் தம்பி விடுதலையானதை அறிந்த பலாப்பழக்காரர், மகிழ்ச்சியில் இருந்தார். வரவேற்க வருவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்திருந்ததுதான் மிச்சம்… செல்போனில் கூட யாரும் பேசவில்லையாம்… இத்தனை ஆண்டு இந்த மாவட்டத்தில் இருந்து என்ன பயன் என நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விட்டில் பூச்சியான உதவியாளர் அச்சத்தில் இருக்கிறதாமே ஆளுங்கட்சி தரப்பு..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சமீபத்தில் புதுச்சேரி பஸ் நிலையத்தில் போதை மனிதரிடம் லட்சக்கணக்கிலான பணத்தை ஒரு பையில் இருந்து கைப்பற்றியது அப்பகுதி காவல்துறை. விசாரணையில் அப்பணம் முந்திரி வணிகருக்கு சொந்தமானது எனவும், தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது உதவியாளர் மூலம் அப்பணத்தை கொடுத்து அனுப்பியபோது காக்கியிடம் சிக்கியதால் ஐடி, ஈடியிடம் இருந்து தப்பிக்க நிலைய அதிகாரியுடன் கூட்டுச் சேர்ந்து பங்கு போட்ட விவகாரம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது..
இந்த தகவல் கசிந்து விடவே, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியோ அங்கிருந்து உடனே ஆயுதப்படைக்கு பந்தாடப்பட்டார். தேஜ கூட்டணி ஆட்சியின் முதல்வரான புல்லட்சாமியோ, இவ்விஷயத்தில் வாய்திறக்காமல் மவுனமாக உலாவும் நிலையில், இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் பாரபட்சமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோஷங்களையும் அரசியல் கட்சிகள் எழுப்பி வருகின்றன.
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நிலைய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதோடு, பணத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்படும் எம்எல்ஏ பொதுவெளியில் பகிரங்கமாக விளக்கமளிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் பொதுமக்களிடம் எழுந்துள்ளன. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விட்டில் பூச்சியான முந்திரி வணிகரின் உதவியாளரிடம் விசாரணை பிடி இறுகினால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பதாலும், இது வரவுள்ள பொதுத்தேர்தலில் தேஜ கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதாலும் ஆடிப்போய் இருக்கிறதாம் ஆளுங்கட்சி தரப்பு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post புதிய கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக நிர்வாகிகள் கல்லா கட்டுவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.