சென்னை: 2021ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், மாநில அரசின் நிதி நிலைமையையும், ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைக்க 9 மாத கால அவகாசத்துடன் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இதற்கு தலைமை சங்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவை கலைத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (7ம் தேதி) அனைத்து தலைமை செயலக பணியாளர்களும் கருப்புப்பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் கூறும்போது, ”தற்போது அமைத்துள்ள அதிகாரிகள் குழு என்பது சட்டமன்ற தேர்தலின்போது அளித்த பழைய ஓய்வூதிய திட்டம் அமல் என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. அதனால், அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
The post புதிய ஓய்வூதியம் குறித்து பரிந்துரை செய்ய அதிகாரிகள் குழு அமைத்ததற்கு எதிர்ப்பு; தலைமை செயலக பணியாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிக்கு வந்தனர் appeared first on Dinakaran.