
பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66,400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் உயரத் தொடங்கியது. நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.