புதிதாக போடப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் பள்ளம், விரிசல்

2 hours ago 2

* வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதால் மக்கள் அச்சம்

* நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செய்துங்கநல்லூர் : புதிதாக போடப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் பள்ளம், விரிசல் ஏற்பட்டு இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூரில் இருந்து வசவப்பபுரம் வரை உள்ள சாலை ஏற்கனவே ஒரு வழி சாலையாக இருந்து வந்தது.

இதனால் ஒரு வாகனம் எதிரில் வந்தால் இன்னொரு வாகனம் ஒதுங்கி நின்று செல்லக்கூடிய நிலையில் தான் இந்த சாலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த சாலையை தரம் உயர்த்தி இரு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது வாகனங்களில் எளிதில் சென்று வர முடிவதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சாலை உள்ளது.

இந்நிலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வசவப்பபுரம் சாலையில் அனைவரதநல்லூர் கிராமத்தின் அருகில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இணைப்பு பகுதியில் சரியாக மணல்கள் போடாமல் தார் சாலை மேலே போடப்பட்டது. இதனால் தற்போது அங்கு பள்ளம் ஏற்பட்டு விரிசல் விழுந்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும் போது சாலையோரமாக வாகனங்கள் ஒதுங்கினால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த விபத்து அபாயத்தை தடுக்க அனவரத நல்லூரில் உள்ள விரிவாக்க சாலையில் கல்வெட்டு பாலம் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘புதிதாக சாலை போடப்பட்டு 6 மாதங்கள் தான் ஆகியுள்ளது. ஆனால் அதற்குள் சாலையில் பள்ளம் ஏற்பட்டு விரிசல் உண்டாகியுள்ளது. இந்த பகுதியில் சாலையின் தரத்தை ஆய்வு செய்து பள்ளம், விரிசலை சீரமைப்பது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post புதிதாக போடப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் பள்ளம், விரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article