சென்னை: புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 8ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 29ம் தேதி நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, உள்பட 4 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 8ம் தேதி (செவ்வாய்) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா சென்று வந்தார். அப்போது 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் சில நிறுவனங்கள் உடனடியாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்களுக்கு 8ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும், தற்போது தமிழகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
The post புதிதாக அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் வரும் 8ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.