காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமான புதர் மண்டி கிடக்கும் பொன்னேரி ஏரியை தூர்வாரி சீரமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். காஞ்சிபுரத்தின் பழமை வாய்ந்த பொன்னேரி ஏரி காஞ்சிபுரம் – சென்னை சாலையில் உள்ளது. இந்த ஏரியில், வசம்பு உள்ளிட்ட மூலிகைப் பொருள்கள் விளைந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கு வடக்கு திசையில் அரணாக விளங்கும் பொன்னேரி ஏரி தற்போது கருவேல மரங்கள் நிறைந்து ஆடாதோடை மற்றும் களைச் செடிகளால் புதர் மண்டிக் கிடக்கிறது.
இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தற்போது விவசாயத் தேவைக்கு பயன்படவில்லை என்றாலும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. காஞ்சியில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த ஏரியின் வழியாக ரயில்வே மேம்பாலம் செல்கிறது. ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கியபோது மேம்பாலத்திற்கான தூண்கள் ஏரியில் அமைப்பதால் ஏரியின் நீர் பிடிப்பு அளவு குறையும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர்.
ஆனால், பொதுப்பணித் துறையினர், ஏரி நீரில் கொள்ளளவுக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் வகையில் ஏரியை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்படும் என்று அப்போது தெரிவித்தனர். ஆனால், மேம்பாலப் பணிகள் முடிவடைந்து புழக்கத்திற்கு வந்த நிலையிலும் ஏரி பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 1998ம் ஆண்டு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற இறையன்பு ஐஏஎஸ், பொன்னேரி ஏரியை சீரமைத்து படகு குழாம் அமைத்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து நடவடிக்கை இல்லாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் நகரின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியை தூர்வாரி சீரமைத்து படகு குழாம் ஏற்படுத்தினால் காஞ்சிபுரம் நகரம் மேம்பாடு அடைவதுடன், வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, புதர் மண்டிக் கிடக்கும் பொன்னேரி ஏரியை தூர்வாரி, சீரமைத்து சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post புதர் மண்டிக்கிடக்கும் பொன்னேரி ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.