புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

5 days ago 2

சத்தியமங்கலம்,நவ.8: கறவை மாடு, வளர்ப்பு கன்றுகள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது.ஈரோடு, கோவை,திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.

நேற்று கூடிய சந்தைக்கு 30 எருமைகள்,200 கலப்பின மாடுகள்,100 கன்றுகள்,220 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் ரூ.35 ஆயிரத்துக்கும், கறுப்பு வெள்ளை மாடு ரூ.42 ஆயிரத்துக்கும், ஜெர்சி ரூ.48 ஆயிரம் வரையிலும், சிந்து ரூ.42 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், நாட்டுமாடு ரூ.72 ஆயிரம் வரை விற்பனை ஆனது.வளர்ப்பு கன்றுகள் ரூ.6000 முதல் 14 ஆயிரம் வரை விற்பனையானது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று ரூ.7000 வரையும், 10 கிலோ செம்மறி ஆடு ரூ.6500 வரையும் விற்பனையானது. கர்நாடக,கேரளா மாநில வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.

புரட்டாசி விரதம் காரணமாக கடந்த சில வாரங்களாக சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைவாக இருந்ததாகவும் தற்போது ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளதால் இந்த வாரம் கறவை மாடு,கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் கால்நடைகள் விலை உயர்ந்து விற்பனை ஆனதாகவும், அதிகாலை சந்தை துவங்கிய நிலையில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் விற்று ரூ. 1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article