புங்கனூர் கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா- வாகன சேவைகள் விவரம்

1 week ago 6

சித்தூர்:

சித்தூர் மாவட்டம் புங்கனூரில் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள இந்தக் கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 7 முதல் 15-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

முன்னதாக மார்ச் 6-ம் தேதி மாலை அங்குரார்ப்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது.

விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவைகள் நடக்கின்றன. அதன் விவரம்:

மார்ச் 7-ம் தேதி மதியம் 12.25 மணியில் இருந்து 12.45 வரை மிதுன ராசியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 8-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 9-ம் தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 10-ம் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமன் வாகன வீதிஉலா, 11-ம் தேதி காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கு உற்சவ வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

12-ம் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 13-ம் தேதி காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை கல்யாணோற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா, 14-ம் தேதி காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 15-ம் தேதி காலை வசந்தோற்சவம், காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா முடிகிறது.

வீதிஉலா நேரம்

தினமும் காலை 8 மணியில் இருந்து 11 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாசன சேவை நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடரமணசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Read Entire Article