ஈரோடு, ஜன.12: பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகிப் பண்டிகை நாளை (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் அடிப்படையில் வீட்டில் உள்ள தேவையில்லாத பழைய பொருள்களை எரிப்பது வழக்கம். தற்போதைய சூழ்நிலையில், பழைய பொருட்களாக வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக், செயற்கை இலைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், டயர், டியூப், காகிதம் மற்றும் ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று பெருமளவில் மாசடைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ரசாயன பொருள்களின் புகை மூட்டத்தில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் பொது மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்த போகி பண்டிகையை புகை மற்றும் மாசு இல்லாத போகிப்பண்டிகையாக கொண்டாட பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், ரப்பர் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்த்து, காற்றின் தூய்மையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டுக் கொண்டுள்ளார்.
The post புகை, மாசு இல்லா போகி கொண்டாட அறிவுறுத்தல் appeared first on Dinakaran.