லகிசராய்,
மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் இருந்து கயா நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில், பீகாரின் லகிசராய் மாவட்டத்தில் உள்ள கியுல் ரெயில்வே சந்திப்பை நோக்கி சென்றது. அப்போது, ரெயிலில் பயணித்த மர்ம நபர்கள் திடீரென எழுந்து, மற்றொரு பயணியை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், படுகாயமடைந்த அந்த பயணி சம்பவ இடத்திலேயே பலியானர். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விட்டனர்.
இதுபற்றி ரெயில்வே போலீஸ் சூப்பிரெண்டு (ஜமல்பூர்) ராமன் சவுத்ரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பலியான பயணி தர்மேந்திர குமார் (வயது 49) என்பதும் அவர் லகிசராயில் வசித்து வந்தவர் என்றும் தெரிய வந்தது.
அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மேந்திராவின் பையில் சொத்து தொடர்பான ஆவணங்கள் இருந்தன. இதனால், இந்த தாக்குதலுக்கு சொத்து விவகாரம் ஒரு காரணமா? அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட விரோதம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.