
ஹாஜிப்பூர்,
பீகாரில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. மொத்தம் 12 லட்சத்து 80 ஆயிரத்து 211 மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் 11 லட்சத்து 7 ஆயிரத்து 330 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 86.50 என்ற அளவில் தேர்ச்சி சதவீதம் உள்ளது. இவர்களில் மாணவிகள் (5,59,065), மாணவர்களை (5,48,148) விட கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில், வைஷாலி மாவட்டத்தில் வசித்து வரும் ரோஷ்னி குமாரி, பீகார் மாநில அளவில் வர்த்தக பாட பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்த வெற்றி பற்றி அவர் கூறும்போது, என்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நிதி நெருக்கடிகளால் இதற்கு முன் படித்த பள்ளியில் இருந்து விலகி, அரசு பள்ளியில் சேர்ந்தேன். என்னுடைய தாயார் என்னை நன்றாக படிக்கும்படி ஊக்குவித்து கொண்டே வந்தார்.
12-ம் வகுப்புக்கு பின்னர் சி.ஏ. படிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், நிதி நிலைமையை கவனத்தில் கொண்டு அந்த யோசனையை கைவிட்டேன். சி.எஸ். படிக்கலாம் என நினைத்தேன்.
பணத்திற்காக கவலைப்படாதே என என்னுடைய ஆசிரியர்கள் கூறினர். அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று கூறியுள்ளார். ரோஷ்னியின் சாதனையானது, ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தபோதும், அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும்போது, எவராலும் அவர்களுடைய கனவை நனவாக்க முடியும் என வெளிப்படுத்தி உள்ளது.
முதல்-மந்திரி நிதிஷ் குமார், ரோஷ்னி மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.