உலக வாழ்க்கை முறை பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணை கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார் ஔவை பாட்டி.
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
– என்று கூறும் ஔவை பாட்டி உலகத்தில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பதுதான். மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் சுயஒழுக்கமும் உடையவராய் இருத்தல் அரியது என்கிறார். மனிதன் எந்த உடல் குறைபாடும் இல்லாமல் பிறப்பது அரியது, அதிலும் பார்வைக் குறைபாடு இல்லாமல் பிறப்பது மனித வாழ்வின் வரப்பிரசாதம் ஆகும்.
மனிதனுக்கு வாழ்க்கைக்குத் தேவையான 75 முதல் 80% செய்திகளை, அனுபவங்களைத் தனது கண்கள் மூலமாகவே தெரிந்துகொள்கிறான். அதிலும் குறிப்பாகப் பள்ளிக்குச் செல்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கற்றல் எனும் தொடர்நிகழ்வை 80% கண்கள் மூலமாகவே செயல்படுத்துகிறார்கள். ஒரு குழந்தை தனது பள்ளியில் வெற்றிகரமான மாணவராகத் திகழ்வதில் அவர்களின் கண்பார்வை முக்கியப் பங்கு வகிக்கிறது. யு.எஸ்-ல் உள்ள ஆப்டோமெட்ரி கல்லூரி நடத்திய ஆய்வில் சுமார் 25% குழந்தைகளுக்குப் பார்வை சார்ந்த பிரச்னைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதேபோல் சென்னை சங்கர நேத்ராலயாவின் எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளியிலும் ‘இலவசக் கண்பரிசோதனை முகாம்’ நடத்தியது. தனக்குக் கண்பார்வைக் குறைபாடு இருக்கிறது என்பது தெரியாமலேயே சுமார் 25% மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் என்பதை அவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.
பொதுவாகக் குழந்தைகளை 3 வயதில் பள்ளியில் சேர்த்தவுடன், ‘ஒரு பொருள் தனது கண்ணுக்கு எவ்வாறு தெரிகிறதோ அப்படியேதான் மற்றவர்களுக்கும் தெரிகிறது, அதுதான் பொதுவான நல்ல பார்வை’என்று நினைத்துக் கொள்வார்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆக விளையாட்டிலும் கண் பார்வை முக்கிய இடம் வகிக்கிறது. கண் களில் பார்வைக்குறைபாடு இருக்குமேயானால், அவர்கள் விளையாட்டு மற்றும் வேடிக்கைகளில் கலந்துகொண்டு கிடைக்கும் மகிழ்ச்சியை இழந்து விடுகிறார்கள். கண் மருத்துவ நிபுணர்கள் பள்ளிக்கூட வயது குழந்தைகளின் கண் நலம் குறித்து அதிகம் குறிப்பிடுவது ஒளிக்கதிர் சிதறல் பிழை (Refractive Errors) பார்வைத்திறன் குறைபாடு ஆகும்.
முக்கியமான அறிகுறிகள்:
பள்ளிக்கூட வயது குழந்தைகளின் கண்நலம் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தி, உரிய சேவைகளை வழங்கு வதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். குழந்தைகளின் பார்வைக்குறைபாட்டினை பின்வரும் அறிகுறிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு அவர்களின் பார்வை விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த
வேண்டும்.
*அடிக்கடி தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகே அமர்ந்து பார்த்தல் மற்றும் புத்தகங்களைக் கண்களுக்கு அருகே வைத்துப் படிப்பது.
*படித்துக்கொண்டிருக்கும்போது புத்தகத்தில் படித்த இடத்தைத் தவற விட்டுவிட்டு மீண்டும் தேடுவது.
*படிக்கும்போது படிக்கும் வார்த்தைகளை ஆட்காட்டி விரலினால் தொடர்வது.
*குழந்தைக்கு மாறுகண் இருப்பது.
*ஒரு பொருளை உதாரணமாக புத்தகத்தை, அல்லது வகுப்பறையில் கரும்பலகையைப் பார்க்கும்போது சரியாகப் பார்ப்பதற்காக தலையை ஒருபுறமாகச் சாய்த்துப் பார்ப்பது.
*கண்களை அடிக்கடி அழுத்தித் தடவி விட்டுக்கொள்வது.
*வெளிச்சத்தைப் பார்த்தால் அசௌ கரியமாக உணர்வது.
*படிக்கும்போது அதிகமாகக் கண்ணீர் வெளியேறுவது.
*ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணால் படிப்பது, தொலைக்காட்சியைப் பார்ப்பது அல்லது பொதுவாகவே ஒரு கண்ணை மூடிக்கொண்டே பார்ப்பது.
*அருகிலிருந்து செய்யக்கூடிய செயல்களைக் குறிப்பாகப் படித்தல், வீட்டுப்பாடம் எழுதுதல் போன்றவற்றைச் செய்யாமல் தவிர்ப்பது.
*தொலைதூரப் பார்வையைப் பயன் படுத்தி செய்யக்கூடிய – விளையாடுவது மற்றும் வேடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பது.
*அடிக்கடி தலைவலிப்பதாகவும் கண்கள் களைப்பாக இருப்பதாகவும் சொல்வது.
*கம்ப்யூட்டரில் படிப்பது மற்றும் வேலை செய்யும்போது கண்களுக்குச் சிரமமாக இருப்பதாகச் சொல்வது.
*முக்கியமான ஒன்று, நல்ல மதிப்பெண்கள் பெறும் குழந்தைகள் திடீரென்று வழக்கத்திற்கு மாறாகக் குறைவான மதிப்பெண்கள் பெறுவது.
– மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஒரு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையிடம் இருக்குமேயானால் அந்த குழந்தைக்குக் கிட்டப்பார்வை, தூரப்பர்வை அல்லது தெளிவற்ற பார்வை போன்ற ஏதாவது ஒரு குறைபாடு இருக்கலாம். அந்த குழந்தையின் உடனடித்தேவை, முழுமையான கண் பரிசோதனை ஆகும். பரிசோதனை மூலம் பார்வைத்திறன் குறைபாடு இருப்பதாகத் தெரிந்தால் கண் மருத்துவ நிபுணரின் பரிந்துரைப்படி கண்ணாடி அணிந்தோ அல்லது 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் காண்டாக்ட் லென்ஸ் அணிந்தோ குறைபாட்டைச் சரி செய்து கொள்ளலாம்.
மாணவ மாணவியர்களின் பார்வை இழப்பைத் தடுப்பது எப்படி?
டீன் ஏஜ் ஆண்/பெண் உட்பட இளைஞர்கள் பலரும் எதிர்பாராமல் சந்திப்பது கண் பார்வைக்குறைபாடுதான். குழந்தைகள் முதல் 19 வயது வரையிலான காலகட்டத்தில் அவர்களுடைய செயல்பாடுகளைப் பொறுத்தும் கண் அமைப்பினைப் பொறுத்தும் பார்வைத்திறன் பிழை/குறைபாடு எனப்படும் Refractive Error காரணமாகப் பலரும் இன்று கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால், வருடம் ஒரு முறை பார்வைத்திறனைப் பரிசோதனைசெய்து, கண்ணாடியின் பவர் மாறியிருந்தால், கண்ணாடியைக் கண்டிப்பாக மாற்றியே ஆகவேண்டும். பல சொந்த காரணங்களால் அவ்வாறு மாற்றாமல் பழைய கண்ணாடியையே அணிவது, அவர்கள் தவறான கண்ணாடியை அணிவதாகவே அர்த்தம். தவறான கண்ணாடியை அணிவது மேலும் பல பிரச்னைகளை உண்டாக்கும்.
கண்ணாடி அணிபவர்களைக் கேலி செய்யாதீர்கள்!
சங்கர நேத்ராலயாவின் எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம்களில் கண்ணாடி தேவைப்பட்ட குழந்தைகளுக்கு அரிமா சங்கங்கள் மூலம் இலவச கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. சுமார் 3 மாதங்கள் கழித்து ஒரு ஃபாலோ அப் ஸ்டடிக்காக, கண்ணாடி வழங்கப்பட்ட குழந்தைகளைச் சந்திக்கச் சென்றபோது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கண்ணாடி அணிய வேண்டிய குழந்தைகளில், சுமார் 10% மாணவ/மாணவிகள் மட்டுமே தொடர்ந்து கண்ணாடி அணிந்துகொண்டு இருந்தனர். மற்றவர்கள் கண்ணாடியை அணிவதே இல்லை. காரணம், கண்ணாடி அணிய வேண்டியதன் அவசியத்தை குழந்தைளும், குழந்தைகளைக்காட்டிலும் பெற்றோர்களும் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான்.
*கண்ணாடி அணிவது நம் உடலில் உள்ள ஒரு குறையைச் சரிசெய்து கொள்ளவே என்பதைப் பெற்றோர்களும் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
*கண்ணாடி அணிவதைக் கேலிசெய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனை நம் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் நம் குழந்தை கண்ணாடி அணியும் குழந்தைகளைக் கேலி செய்வதை ஒரு மாபெரும் பாவமென்று சொல்லி திருத்த வேண்டும்.
*சில நேரங்களில், அடையாளம் சொல்லி அழைப்பதற்காக ஆசிரியர்களே, ’டேய் கண்ணாடி’ என்று கண்ணாடி அணியும் மாணவர்களை அழைக்கும் அவலம் இன்றும் சில இடங்களில் தொடரத்தான் செய்கிறது. இது ஆபத்தான, தகாத செயல் ஆகும்.
*கண்ணாடி அணியும் குழந்தைகள், ஒருவேளை கண்ணாடி அணியாமல் வகுப்பறையில் இருந்தால், ஏன் என்று விசாரித்து அந்த மாணவர்/மாணவி கண்ணாடியை அணிந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
*குழந்தைகளுக்கு பிளாஸ்டிக்கினால் ஆன லென்ஸ்களை வாங்கிக் கொடுப்பது நல்லது. இது கண்ணாடி கீழே விழுந்து உடைந்துபோவதை தவிர்க்கும்.
*மேலும் சிலருக்கு கண்ணாடி அழகாகவும் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
*கண்ணாடி அணிய வேண்டிய குழந்தைகள், கண்ணாடி அணிவதைத் தவிர்க்கும் போது, அவர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்கள் வேலைகளான, படிப்பது, எழுதுவது, விளையாடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்பதையும், கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பதனால், அவர்கள் பார்வைத்திறன் குறைபாடு மேலும் மோசமாகிறது என்பதையும் புரிந்து கொண்டு இங்கே பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
*பார்வைத்திறனில் – அதாவது பவரில் மாற்றம் வரலாம். எனவே கண்ணாடி அணிபவர்கள் அனைவரும் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொண்டு தகுதியான கண்ணாடியை அணிய வேண்டும். அதன் மூலம் கண்பார்வைத்திறனை முறைப்படி தக்க வைத்துக்கொள்ள முடியும்.
The post பிள்ளைகளின் பார்வைத்திறனில் பெற்றோருக்குக் கவனம் தேவை! appeared first on Dinakaran.