சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் விடாமுயற்சி படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருப்பதால், ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகளவில் நடந்து வரும் டிக்கெட் முன்பதிவில் இப்படம் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தி கோட்' திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.18.9 கோடி வசூல் செய்திருந்தது. இந்த வசூல் சாதனையை அஜித்தின் விடாமுயற்சி படம் முறியடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், 'தி கோட்' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.