பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள் - ரா.முத்தரசன்

4 hours ago 2

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து உயர்கல்விக்கு செல்கிறார்கள். அனைவரும் அவரவர் துறையில் முன்னேறி முத்திரை பதிக்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கணினி அறிவியல் பாடம் அதிகபட்ச மாணவர்களை ஈர்த்திருப்பது கவனத்தில் கொள்ள தக்கது. தமிழ் பாடத்தில் 135 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருப்பதை கருத்தில் கொண்டு, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அரசுப் பள்ளிகளில் அதிகபட்ச மாணவர் தேர்ச்சி பெற்றுள்ள அரியலூர், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, கடலூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்ச மதிப்பெண் கிடைக்காத நிலையில் 39 ஆயிரத்து 352 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற இயலவில்லை. இவர்கள் மனம் தளராமல் வரும் ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும் துணைத் தேர்வில் பங்கேற்று, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறி செல்ல வேண்டும். பத்தாயிரத்து 49 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

இந்த மாணவர்கள் பயின்ற பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, துணைத் தேர்வில் பங்கேற்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தேர்வில் பங்கேற்ற அனைவரும் எதிர்காலத்தில் நல்ல பலனையும், உயர்வையும் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article