பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

5 hours ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள்.

தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளிவந்தது. மொத்தம் 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலை 11 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டன. அதில், தலைமையாசிரியர் பள்ளியின் முத்திரையுடன் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு வழங்கினார்.

இதற்கிடையே, பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற நாளை (செவ்வாய்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை முதல் 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 செலுத்த வேண்டும். நகல் பெற்றவுடன் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article