
சென்னை,
'பிளஸ்-1 படிக்கும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல ஒரு எம்.பி.க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணமின்றி பட்டப்படிப்பும், இஸ்ரோவில் பணி நியமனமும் பெறுவார்கள்' என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பரவும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இஸ்ரோ அமைப்பு 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்வாகும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்க பயிற்சிகளும் அளிக்கப்படும். இதில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும். இதை திரித்து இஸ்ரோ மூலம் பிளஸ்-1 மாணவர்களுக்கு பயிற்சி, இலவச பட்டப்படிப்பு வழங்குவதாக தவறாக பரப்பி வருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.