பிளவுவாத அரசியல் நடத்தி நாட்டை பாழ்படுத்தும் பாஜ தான் எங்களின் முதல் எதிரி: த.வெ.க மாநில மாநாட்டில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

3 weeks ago 5

விக்கிரவாண்டி: ‘பிளவுவாத அரசியல் நடத்தி நாட்டை பாழ்படுத்தும் பாஜதான் எங்களின் முதல் எதிரி’ என தவெக முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசி உள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை பதிவு செய்தார். பின்னர் தனது கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் என்ற இடத்தில் அக்.27ம் தேதி (நேற்று) நடைபெறும் என அறிவித்தார். இதையடுத்து 85 ஏக்கரில் மாநாட்டு பணிகள் மும்முரமாக நடந்தது. நேற்று முன்தினமே மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் சென்றுவிட்டார்.

அங்கு மாநாட்டு இறுதிக்கட்ட பணிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள கேரவனில் தங்கினார். நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள், ரசிகர்கள் மாநாட்டு திடலில் குவியத் தொடங்கினர். வெயில் அதிகமாக இருந்ததால் குறித்த மாலை 3 மணிக்கே மாநாடு தொடங்கியது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர். முதலில் கட்சியின் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து பறை இசை, ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாலை 4 மணியளவில் கேரவனிலிருந்து மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் மேடையின் முன்புறம் சுமார் 800 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டிருந்த ரேம்பில் வந்து தொண்டர்களிடையே கையை அசைத்து காண்பித்தார். தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை எடுத்து கழுத்தில் போட்டு கொண்டார். சில துண்டுகளை தொண்டர்கள் மத்தியில் வீசினார். பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், மன்னர்கள் படங்களுக்கு மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் த.வெ.க. கொடியை ரிமோட் மூலம் ஏற்றிவைத்தார். பின்னர் கீழே அமர்ந்திருந்த தாய், தந்தையை கட்டி அணைத்து ஆசி பெற்றார். தொடர்ந்து, வரவேற்புரை மற்றும் கட்சியின் கொள்கைகள் வெளியிடப்பட்டு பின் மாநாட்டில் விஜய் பேசியதாவது: ஒரு குழந்தை முதன்முதலில் அம்மா என்று சொன்னதும் அந்த அம்மாவுக்கு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க. அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று அந்த அம்மாவிடம் கேட்டால் அவர்களால் விளக்கி சொல்ல முடியும். ஆனால் அந்த உணர்வு எப்படி இருந்தது என்று அந்த குழந்தையிடம் கேட்டால் அதனால் எப்படி சொல்ல முடியும்.

அப்படி ஒரு உணர்வோடுதான் நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் ஒரு பாம்பு வந்து படமெடுக்குதுன்னு வையுங்க… என்ன நடக்கும்… ஆனால் அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா?. தனது அம்மாவை பார்த்து சிரித்த அதே சிரிப்புடன் அந்த பாம்பை கையில் பிடித்து விளையாட ஆரம்பிக்கும். இங்கு அந்த பாம்புதான் அரசியல். அரசியலுக்கு நாம் குழந்தைதான். இது அடுத்தவர்களின் கமெண்ட். ஆனால் பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய கான்பிடென்ட். அரசியல் கொஞ்சம் சீரியசாகத்தான் இருக்கும்.

அதனால் பாம்பாக இருந்தாலும் பாலிடிக்சாக இருந்தாலும் கையில் எடுக்கிறதா முடிவு பண்ணத்துக்கு அப்புறம் சீரியசுடன் கொஞ்சம் சிரிப்பையும் கையில் எடுத்து போறதுதான் நம்முடைய ஸ்டைல், நம்முடைய ரூட். தாறுமாறாக ஆடுற ஆட்டம் இதுவல்ல. கூச்சல் போட முடியாது அல்ல. கவனமாகத்தன் களமாடனும். அரசியல் என்றாலே கொந்தளித்தால்தான் புரட்சி பண்ண வந்தாங்க என்பது செட் ஆயிடுச்சு.. கொந்தளிப்பது என்பதெல்லாம் நமக்கு வேண்டாம். அது நமக்கும் செட் ஆகாது. பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போறதில்லை.

எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவங்க இல்லை. அரசியலில் அண்ணன், தம்பி உறவை அறிமுகப்படுத்தின அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடும். ஆனாலும் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை பெரியார் சொன்ன எல்லாவற்றையும் நாம முன்னெடுக்க போகிறோம். பெரியாருக்கு அப்புறம் எங்கள் கொள்கை தலைவர் பச்சைத்தமிழன் பெருந்தலைவர் காமராஜர்.

இந்த மண்ணில் மதச் சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். இந்திய துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கிக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் இந்த பெயரை கேட்டாலே…. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திறவங்க எல்லாம் நடுங்கி போயிடுவாங்க… வகுப்புவாதி பிரதிநிதித்துவத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் நிலைநிறுத்த போராடிய மாபெரும் தலைவர்.

பெண்களை கொள்கை தலைவராக ஏற்று களத்தில்வரும் முதல் அரசியல் கட்சி தவெகதான். அப்படி இரு பெண்களில் ஒருவர் வேலு நாச்சியார், மற்றொருவர் அஞ்சலை அம்மாள். இவர்கள்தான் நம் கொள்கை தலைவர்கள். சொத்தை இழந்தாலும் இந்த மண்ணுக்காக போராடியவர்தான் அஞ்சலை அம்மாள். இவர்களை உறுதியாக நாம் பின்பற்றுவதுதான் மதச்சார்பின்மைக்கும், சமுதாய நல்லிணக்கத்துக்கும் நமக்கு நல்ல சான்றாக இருக்கும்.

நமக்கெதுக்கு அரசியல் என்றுதான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். ஆனால், நாம் மட்டும் நல்லா இருக்கணும் நினைப்பது சுயநலமில்லையா?. நம்மள வாழ வைத்த மக்களுக்கு எதையும் செய்யாமல் இருந்தால் நல்ல இருக்குமா, ஒரு லெவலுக்கு மேலே காசு சேர்த்து நாம என்ன பண்ணப் போறோம். நமக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த இந்த மக்களுக்கு நாம என்ன செய்யப்போகிறோம். இப்படி எல்லாம் ஏகப்பட்ட கேள்விகளும் மனதில் வந்துகிட்டே இருந்தது. இப்படி எல்லா கேள்விக்கும் விடைதேடி யோசித்தபோது ஒட்டுமொத்தமாக கிடைத்த விடைதான் அரசியல். அதான் இறங்கியாச்சு.

இனி எதைப்பற்றியும் யோசிக்கக் கூடாது. அரசியல்ல நம்ம என்ன ஸ்டாண்ட் எடுக்கப்போகிறோம் என்பதுதான் ரொம்ப இம்பார்ட்டெண்ட். அதுதான் நமது எதிரிகள் யாருன்னு சொல்லும். அப்படி ஒரு கரெக்டான ஸ்டாண்ட் எடுத்திட்டாலே நம்முடைய எதிரிகள் நமக்கு முன்பு வந்து அவர்களே நம்முன்னாடி வந்து நம்மை எதிர்க்க ஆரம்பிப்பாங்க. எதிரிகள் இல்லாத வெற்றி வேண்டுமானால் இருக்கும். ஆனால், களம் இருக்க முடியாதே. அதில் நமது வெற்றியை தீர்மானிப்பது நம்முடைய எதிரிகள்தானே.

நாம கட்சியை அறிமுகப்படுத்தியபோதே அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருக்குறளை நம்முடைய அடிப்படை கோட்பாடாக, கொள்கையாக அறிவித்தபோதே நம்முடைய உண்மையான எதிரி யார்? என்பதை டிக்ளேர் பண்ணிட்டோம். பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு இல்லை, அது கூடவே கூடாது என சமதர்ம சமத்துவ கொள்கையை கையில் எடுத்த அப்பவே இங்கு கொஞ்சம் கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்த மாநாட்டில் இப்போ ஓப்பனா அறிவித்ததுக்கு அப்புறம் இந்த கதறல் இன்னும் சத்தமாக கேட்கும் என நினைக்கிறேன்.. பார்ப்போம்…

எங்களுடைய தவெகவுக்கு நாங்கள் டிசைடு பண்ணி இருக்குற கலர தவிர வேறு எந்த கலரையும் யாரும் அடிக்க முடியாது. எங்க கோட்பாடே பிறப்பால் அனைவரும் சமம் என்பது. இது யாருக்கு நேர் எதிரான கோட்பாடுனு நான் சொல்லியா உங்களுக்கு தெரியணும். எனவே, இந்த நாட்டையே பாழ்படுத்துற பிளவுவாத அரசியலை செய்யுறவங்கதான் (பாஜ) தவெகவின் முழுமுதல் கொள்கை எதிரி. நமக்கு இன்னொரு கோட்பாடும் இருக்கிறதே. ஊழல் மலிந்த கலாசாரத்தை எதிர்க்கிறதானே அது. ஊழல் இருக்கே வைரஸ் மாதிரி பரவிக் கிடக்கு.

அதை ஒழித்தாக வேண்டும். பிளவுவாத சக்திகளைகூட நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்தி, இன்னொரு எதிரி கரப்சன். என் சினிமா உச்சத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய்யாக வந்துள்ளேன். நாகரிகமான அரசியல் செய்யவே வந்துள்ளோம். எங்களின் அரசியல் ஆழமாக இருக்கும். 2026ம் ஆண்டு தேர்தலில் ஒற்றை விரலில் டிவிகே என்ற அரசியல் கட்சியின் சின்னத்துக்காக அழுத்தும் ஒவ்வொரு வாக்குகள் ஒரு பட்டனில் இருந்து அணுகுண்டாக விழும். நடக்கும் பாருங்க…
இவ்வாறு அவர் பேசினார்.

* ‘விசிலடிச்சான் குஞ்சு என்று யாரும் சொல்லிவிடக் கூடாது’
விஜய் பேசுகையில், ‘நம்மை பார்த்து விசிலடிச்சான் குஞ்சு என்று யாரும் சொல்லிவிடக் கூடாது. நமது கொள்கை, கோட்பாடுகளையும், தலைவர்களையும் மனதில் நிறுத்தி மற்றவங்க பார்த்து சொல்லாமல் வேகமானவர்கள், ஆனா விவேகமானவர்கள் என சொல்ல வைக்கணும். எல்லோரும் அப்படி சொல்கிறமாறி செயல்படணும். சொல் அல்ல முக்கியம்.

செயல், செயல், செயல்தான் முக்கியம். அரசியல் போரில் நாம் நம் கொள்கைகளை செய்து முடிப்போம், அதுவரை நெருப்பாக இருப்போம். அதற்காக நாம் வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப் போவதில்லை. அதுவரை நெருப்பாகவே இருப்போம். என்ன நண்பா, என்ன தம்பி, சாரி… என்ன தோழா, என்ன தோழி’ என்றார்.

* தண்ணி இல்ல… சாப்பாடு இல்ல..
விஜய் கட்சி மாநாட்டுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், ரசிகர்கள் வந்தனர். ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. குடிநீர், உணவு போன்ற வசதிகள் இல்லை. மாநாடு திறந்த வெளியில் நடந்ததால், கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நிழலுக்கு கூட ஒதுங்க இடமில்லை. இதனால் 120க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மருத்துவ வசதிகள் முறையாக செய்யாததால் சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ்கள் மிக குறைந்த அளவிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மாநாட்டில் விஜய் பேசும்போது, ‘மக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் செயல்படுவேன்’ என்றார். ஆனால் மாநாட்டுக்கு வந்த எங்களுக்கு தண்ணி, சாப்பாடு கூட கிடைக்கல. இதை சரியா செய்து தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தொண்டர்கள் தெரிவித்தனர்.

* இரங்கல் தெரிவிக்கவில்லை
மாநாட்டில் பங்கேற்க வந்து விபத்தில் சிக்கி 4 பேர் இறந்தனர். இந்த தகவல் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாநாட்டில் உரையாற்றும்போது இறந்தவர்களுக்கு விஜய் இரங்கல் தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. கட்சி தொடங்கி முதல் மாநாட்டில் பலி என்றால் சரியாக இருக்காது என்று எண்ணி விஜய் தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பேச்சின் முடிவில், ‘அனைவரும் பாதுகாப்பாக வீடு போய் சேருங்கள்’ என்று கூட சொல்லவில்லை என சில ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

The post பிளவுவாத அரசியல் நடத்தி நாட்டை பாழ்படுத்தும் பாஜ தான் எங்களின் முதல் எதிரி: த.வெ.க மாநில மாநாட்டில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article