சென்னை: பிறை தென்பட்டதையடுத்து ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜானையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள். கடந்த மார்ச் 1ம் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது.
இதையடுத்து மார்ச் 2ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது. 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காஜி தாவூத் கைஸர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் பரவலாக பிறை தென்பட்டுள்ளது. எனவே நாளை (இன்று) நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று காலை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடக்கிறது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றனர்.
The post பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் கொண்டாட்டம் appeared first on Dinakaran.