சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று (16.05.2025) சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்காத அனுபவங்களை அளிக்கும் மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபவங்களை மேற்கொள்ள விரும்புகின்றார்கள். இவ்வகை சுற்றுலாக்கள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது: அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.