பிறவி என்றால் என்ன பொருள்?

3 months ago 34

– வாசுதேவமூர்த்தி, காஞ்சிபுரம்.

பிறவி என்ற சொல் பிற+வி என்று பிரியும். வி என்பது காற்று அல்லது பறவை என்று பொருள்படும். பறவையானது ஒரு கூட்டில் இருக்கும். அந்த கூடு சிதைந்து விட்டாலோ அல்லது சிதைக்கப்பட்டாலோ, அது அது கூட்டோடு சிதையாமல் வேறு இடத்திற்கு பறந்து வேறு ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்ளும். இதில் பிற என்பது வேறு ஒரு கூடு. (வேறு உடல்) வி என்பது பறவை (உயிர்). ஒரு பறவை வெவ்வேறு கூடுகளுக்கு பறப்பது போல, உயிர்ப் பறவையானது வெவ்வேறு உடல்களில் சென்று சேர்ந்து இருப்பதைத்தான் பிறவி என்று குறிப்பிடு கின்றோம். இதை திருவள்ளுவரும் ‘‘உடம்பை தனித்தொழிய புள் பறந் தற்றே உடம்போடு உயிர் இடை நட்பு’’ என்று சொல்லுவர்.

?நாம் பேசும்போது எப்படிப் பேச வேண்டும்?

– பவஸ்ரீ, நுங்கம்பாக்கம்.

இனிமையாகப் பேச வேண்டும். பிறருக்கு நன்மை தரும்படி பேச வேண்டும். உயர்ந்த விஷயத்தைப் பேச வேண்டும் பொறுமையாகப் பேச வேண்டும். புரிவது போல் பேச வேண்டும். அளவோடு பேச வேண்டும். யோசித்துப் பேச வேண்டும். எப்போது நிறுத்துவது என்பதைத் தெரிந்து பேச வேண்டும். இவைகள் எல்லாம் தெரியாமல் பேசுவதைவிட மௌனம் காப்பது சிறந்தது.

?ஒரு மனிதனின் உயர்வைக் காட்டுவது எது?

– சங்கராமன், தஞ்சை.

இதயமும் நாக்கும்தான். நல்ல எண்ணங்கள், நல்ல பேச்சு இவை – இரண்டும் ஒரு மனிதனின் உயர்வைக் காட்டும் ஆனால் பாருங்கள் இதயமும் சிறியது ஒரு உள்ளங்கை அளவு தான் இருக்கும். நாக்கும் சிறியது. இவை இரண்டும் நல்ல சிந்தனையாலும் நல்ல சொல்லாலும் பெரியவையாக மாறுகின்றன.

?சுயநலம் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்?

– ரகுபதி, திருவண்ணாமலை.

சுயநலம் என்பது ஒரு நெருப்பு போல. அது பெரும்பாலும் மற்றவர்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை. முதலில் மற்றவர்களைச் சாப்பிடும் அந்த நெருப்பு கடைசியில் தன்னையே சாப்பிடுகிறது. உதாரணம், மஹாபாரதத்தில் துரியோதனன்.

?ஒருவருக்கு நண்பர்கள் யார்?

– சி.குமாரஸ்வாமி, சென்னை.

மனிதர்களில் சிலருக்கு நல்ல நண்பர்கள் அமைவதுண்டு. சிலருக்கு அமைவதில்லை. அமையாதவர்கள் சில நண்பர்களை அவர்களேகூட வைத்துக் கொள்ளலாம். அந்த நண்பர்கள் எப்போதும்கூட இருப்பார்கள். தைரியம் புத்தி நுண்ணறிவு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள் அதுதான் பல துன்பங்களின் போது கை கொடுக்கும். அது மட்டும் அல்ல. இவர்கள் நம்முடனே 24 மணி நேரமும் இருக்கும் சூட்சுமமான நண்பர்கள்.

?முகூர்த்த ஜாதகம் என்று ஒன்று இருக்கிறதா?

– சுமதி, மதுரை.

ஆமாம். முகூர்த்த ஜாதகம் என்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாகக் கருதப்பட்டது. காரணம் பிறப்பு ஜாதகம் என்பது நம் கையில் இல்லை. ஒருவன் முன் ஜென்ம வினைப்படி பிறக்கின்றான். ஆனால், அவனுக்கு சுபச் சடங்குகளை நடத்துகின்ற பொழுது சரியான முகூர்த்தத்தில் நடத்துவது முக்கியம் என்று பெரியவர்கள் கருதினார்கள். ஒரு குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது போலவே முகூர்த்த நேரத்துக்கு ஒரு ஜாதகச் சக்கரம் போட்டு அதில் சுபமான லக்கினத்தைத் தேர்ந்தெடுத்து நடத்தினார்கள்.

அதனுடைய அங்கங்களான விஷயங்களை அதாவது மாப்பிள்ளை அழைப்பு பெண்ணை அழைப்பு இதைப் போன்ற சடங்குகளுக்கு ஹோரை சாத்திரம் பார்த்தார்கள். முன் காலத்தில் பத்திரிகை எழுதும் பொழுது திதி லக்னம் நட்சத்திரம் எழுதிவிட்டு நல்லோரையில் என்று எழுதும் வழக்கம் இருந்தது இப்பொழுது ஹோரையை ஒரு சிலரைத்தவிர யாரும் பார்ப்பது போல் தெரியவில்லை.

?சிலர் நம்மை வணங்கும் போது நம்முடைய எண்ணம் எப்படி இருக்க வேண்டும்?

– சேலம்.ஆவுடையப்பன்.

இவர்களெல்லாம் நம்மை வணங்குகின்றார்கள்; ஆக நாம் பெரிய ஆள் என்று நினைத்து கொண்டால் அனர்த்தம்தான் விளையும். உங்களை யாராவது வணங்கினால், அந்த வணக்கம் உங்களுக்கு உரியதாக கருதாதீர்கள். உங்கள் உயிருக்கு உயிராக விளங்கும் இறைவனுக்கே உரியதென்று கருததுங்கள். உங்களைத்தான் வணங்குகிறார்கள் என்ற எண்ணம் கர்வமாக மாறி உங்களை அழித்துவிடும்.

?திருநெல்வேலி அருகே உள்ள வைணவ நவ திருப்பதிகளை நவகிரகங்களுக்கானதாக சொல்லுகின்றார்களே. சரியா?

– மோகனகிருஷ்ணன், விராலிமலை.

வைணவத்தில் நவகிரக வழிபாடு இல்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டது நவகிரகங்கள் என்பதால் நவகிரகங்களைத் தனியாக வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது வைணவ நெறி. ஆனாலும் இப்பொழுது வைணவத்துக்கு நவகிரகத் தலங்கள் இல்லை என்பதை குறையாகக் கருதிய ஒரு சிலரால் திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஆழ்வார் நவதிருப்பதிகளை 9 கிரகங்களோடு தொடர்புப்படுத்திச் சொல்லும் வழக்கம் உண்டாகி இருக்கிறது. இதை வைணவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை, என்றாலும் தகவலுக்காகச் சொல்லுகின்றேன். வரகுண மங்கை – சூரியன்; திருப்புளிங்குடி – சந்திரன். பெருங்குளம் – செவ்வாய்; ஆழ்வார் திருநகரி – புதன்’ திருக்கோளூர் – வியாழன்; ஸ்ரீவைகுண்டம் – சுக்கிரன்; தென்திருப்பேரை – சனி; திருத்தொலை வில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதிகள் ராகு கேதுவுக்கு உரியதாகச் சிலர் சொல்லுகின்றனர்.

? ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு இலக்கணம் சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். கலியுகத்திற்கு என்ன இலக்கணம்?

– ஆனந்த்குமார், ஸ்ரீரங்கப்பட்டினம்.

அதுதான் நடைமுறையில் நாம் பார்க்கிறோமே. இந்த இலக்கணத்தைதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீமத் பாகவதத்திலும் விஷ்ணு புராணத்திலும் சொல்லி இருக்கின்றார்கள். கலி முற்றிக் கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாக சில விஷயங்களை ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

1. தர்மம், சத்தியம், தூய்மை, பொறுமை, ஆயுள் பலம், நினைவாற்றல் இவை மிகவும் குறைவாகவே இருக்கும்.
2. பணம் படைத்தவனே குணவானாகக் கருதப்படுவான். பலம் கொண்டவனே வெற்றி பெறுவான்.
3. ஏமாற்றிப் பிழைப்பதே வணிகத்திறன் என்று கருதப்படும்.
4. அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) என்ற இந்த இரண்டையே மக்கள் கவனத்தில் கொள்வார்கள். தர்மம், மோட்சம் இந்த இரண்டைப் பற்றியும் நினைக்க மாட்டார்கள். வெறும் பேச்சளவில் இருக்கும்.
5. வியாதிகள் ஒரு பக்கம், பசி ஒரு பக்கம், வறுமை ஒரு பக்கம், இவற்றால் அவதியுற்று மக்கள் தவிப்பார்கள். தர்மங்கள் மறைந்துவிடும். உறவுகளைச் சிக்கலாகக் கருதுவார்கள். தனித்து வாழவே விரும்புவார்கள்.இப்படிப் பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லா விஷயங்களையும் நான் குறிப்பிடவில்லை. இப்பொழுது மேலே குறிப்பிட்ட விஷயங்களைப் பார்க்கின்ற பொழுது உங்களுக்கே தெரியும், கலிகாலம் எந்த நிலையில் போய்க் கொண்டிருக்கிறது என்று.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். இதில் நாம் ஏதேனும் செய்ய முடியுமா? கலியின் கொடுமையில் இருந்து மீள முடியுமா? நிச்சயம் மீள முடியும். பள்ளம் என்று இருந்தால், அதை மண் போட்டு மேடாக்க வேண்டும். அதை போல் அறம் வளர்க்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும். பிறர்படும் துன்பத்தைக் கண்டு அதனை தீர்க்க முயல வேண்டும். நல்ல விஷயங்களைப் பரப்ப வேண்டும். இவைகள்தான் கலிவிஷத்துக்கு மருந்து.

?ஏன் தியானத்தை அதிகம் வற்புறுத்துகிறார்கள்?

– ஜகன், வந்தவாசி.

ஆர்ப்பாட்டமான நிலையில் எதுவுமே சரியாகப் புரியாது. உதாரணமாக கலங்கிய தண்ணீரில் எதுவுமே செய்ய முடியாது. குளிக்க முடியாது. குடிக்க முடியாது. எதற்கும் பயன்படாது. அதே தண்ணீரை கொஞ்சம் அப்படியே விட்டோம் என்று சொன்னால் கலக்கிய விஷயங்கள் அடியில் போய் மேலாகத் தெளிவான தண்ணீர் கிடைக்கும். அந்தத் தண்ணீரை நீங்கள் பயன்படுத்த முடியும். மனமும் அப்படித்தான்.

புற உலக ஆர்ப்பாட்டங்களினால் கலங்கிப் போய் கிடக்கிறது. அப்பொழுது நமக்கு ஏற்படுகின்ற எந்த முடிவுகளும் நன்மை செய்யாது பயன் தராது. அதை அப்படியே அமைதியாக விட்டோம் என்று சொன்னால் தேவையற்ற எண்ணங்கள் கீழே படியும். மனம் தெளிந்த நீர் போல இருக்கும். இந்த அமைதியான மனதில் பல உயர்ந்த எண்ணங்களும்
சிந்தனைகளும் ஏற்படும். இந்த அமைதிக்கு காரணமாக அமைவது தியானம். அதனால்தான் ஆன்மிகத்தில் தியானம் என்ற ஒன்றை வைத்தார்கள்.

? சடங்குகள்தான் ஆன்மிகமா?

– கணேசன், ராணிபேட்டை.

இதில்தான் நாம் எல்லோரும் பெரும்பாலும் குழம்பிவிடுகின்றோம். இங்கு பெரும்பாலோர் சடங்குகள்தான் ஆன்மிகம் என்கின்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். சடங்குகள் ஆன்மிகத்தில் ஒரு பகுதி. வெறும் கையோ காலோ எப்படி முழு ஆளாக முடியும்? ஆனால், ஆளுக்கு கையும் காலும் வேண்டும். அதைப்போல ஆன்மிகத்துக்குச் சடங்குகளும் வேண்டுமே தவிர, வெறும் சடங்குகள் ஆன்மிகமாக இருப்பதற்கு வழியில்லை. சிலர் சடங்குகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, உண்மையான பக்திக்கும், பக்தி சார்ந்த எளிய செயல்களுக்கும் தருவதில்லை. மனதில் அன்பும் பிறரை நேசித்து உதவும் மனமும் இவையெல்லாம் இணைந்த நற்பண்பும் இறைவன் சந்நதியில் நம்மை கொண்டு போய்ச் சேர்க்கும்.

? இறைவன் நாமத்தை காலையில் குளித்துவிட்டு சொல்ல வேண்டுமா? அல்லது சாயங்காலம் விளக்கு வைத்துத்தான் சொல்ல வேண்டுமா? எப்போது சொல்லலாம்?

கிஷோர், வடபழனி.

எப்பொழுதும் சொல்லலாம். கபிர்தாசர் ஒரு அற்புதமான பதில் சொல்லி இருக்கின்றார். குழந்தை தாய்ப்பாலைக் குடித்துக் கொண்டிருக்கும்.. அப்படியே தூங்கிவிடும். ஆனால் அந்தத் தூக்கத்தில்கூட தாய்ப் பாலைப் பருகிக் கொண்டிருக்கும். அப்படித் தூக்கத்திலும் மறக்காமல் தாய்ப்பாலைப்பருகும் குழந்தையைப் போல எல்லா நேரத்திலும் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்பர். இன்னொரு மகான் இன்னும் எளிமையாகச் சொன்னார். நீ எப்பொழுதெல்லாம் மூச்சுவிடுகிறாயோ, அப்படி மூச்சுவிடும் போது இறைவன் திருநாமத்தைச் சொல்.

? தினசரி பாராயணம் செய்வதற்கு சுருக்கமாக ஏதாவது மந்திரம் அல்லது
ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்?

– என்.எஸ்.சிவக்குமார், திருநெல்வேலி.

ஒரு எளிமையான மங்களகரமான ஸ்லோகத்தைச் சொல்லுகின்றேன் இதை தினசரி பாராயணம் செய்யுங்கள் சகலவிதமான மங்கலங்களும் உண்டாகும்.

மங்களம் பகவான் விஷ்ணு
மங்களம் மதுசூதன
மங்களம் புண்டரிகாட்க்ஷ
மங்களம் கருடத்வஜ
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

இதை பூஜை முடியும் பொழுதும். கோயிலில் சுவாமியை வணங்கும் பொழுதும், வீட்டுக்கு வெளியே வேலையாகப் புறப்படும் போதும், முக்கியமான காரணங்களுக்கு புறப்படும் பொழுதும் இதைச் சொல்லிச் சொல்லுங்கள். வெற்றியும் மங்கலமும் உங்கள் வசமாகும்.

தேஜஸ்வி

 

The post பிறவி என்றால் என்ன பொருள்? appeared first on Dinakaran.

Read Entire Article