தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு இளம்பெண்ணை அழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயா (32). இவரது கணவர் அதேபகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவர், இறந்து விட்டார். இதையடுத்து கணவரின் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரை ஜெயா கவனித்து வந்தார். அப்போது அவருக்கும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த பாலு மகன் அஜித்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இதற்கிடையில் அஜித்குமார் ‘தனக்கு பிறந்தநாள்’ என்று கூறி ஜெயாவை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த ஜெயா, தான் ஏமாற்றப்பட்டதையறிந்து அஜித்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து ஜெயாவை மிரட்ட தொடங்கிய அஜித்குமார், ‘உனது வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன ஜெயா, அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார்.
இதுவரை சுமார் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 6 பவுன் நகையை அஜித்குமார் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இதேபோன்று மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஜெயா, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அஜித்குமார் மீது பெண்ணை தாக்கி துன்புறுத்தி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
வாளால் கேக் வெட்டிய அஜித்குமார்
பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடிய அஜித்குமார், கார் மீது கேக் வைத்து அதனை வாளால் வெட்டி கொண்டாடி உள்ளார். இதுகுறித்த வீடிேயா தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து அவர் மீது பொது இடத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொண்டதாக தென்பாகம் போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
The post பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சீண்டல்: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.