மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில், பிரிஸ்பேன்ல் நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க கடுமையாக போராடியது. அப்போது கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் நிதானமாக ஆடி இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க உதவினர்.
இந்நிலையில், மூன்றாவது போட்டியில் பாலோ ஆனை தவிர்ப்பதற்காக தான் விளையாடவில்லை என இந்திய வீரர் ஆகாஷ் தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்கள் கீழ் வரிசையில் பேட் செய்ய வருகிறோம் அங்கு நாங்கள் 25 முதல் 30 ரன்கள் எடுத்தால் அது மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்கும். அப்போது எனது மனநிலை அணிக்கு பங்களிக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. பாலோ ஆன் பற்றி நான் நினைக்கவில்லை. கடவுள் விரும்பியதால் அதிலிருந்து நாங்கள் தப்பிக்க முடிந்தது.
இப்போது எங்கள் திட்டங்களை நாங்கள் வெளிப்படுத்த முடியாது. ஆனால் நாங்கள் ஒரே பந்து வீச்சு திட்டத்தில் தொடர்ந்து செயல்படுவோம். ஸ்டெம்பில் இரண்டு பக்கத்தில் இருந்தும் பந்து வீசுவோம். ஆடுகளம் மற்றும் சூழ்நிலைகளை வைத்து நாங்கள் திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம்.
ஹெட் குறிப்பாக ஷார்ட் பந்துகளுக்கு எதிராக போராடுகிறார் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவரை கிரீசில் நிலையாக இருக்க அனுமதிக்க மாட்டோம். நாங்கள் குறிப்பிட்ட பகுதிகளை குறி வைத்து பந்து வீசி அவரை தவறுகளில் தள்ளுவோம். இது எங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.