பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்

4 weeks ago 6

பிரிஸ்பேன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை பாதிப்பால் முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட் செய்தது. கவாஜா (21 ரன்), மெக்ஸ்வினி (9 ரன்) ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். அடுத்து வந்த லபுஸ்சேன் 12 ரன்னில் வீழ்த்தப்பட்டார். அப்போது ஆஸ்திரேலியா 75 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் சுமித்தும், டிராவிஸ் ஹெட்டும் கைகோர்த்தனர். நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடியை எளிதில் பிரிக்க முடியவில்லை. குறிப்பாக ஹெட் தடாலடியாக மட்டையை சுழற்றி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சிரமமின்றி ரன்கள் சேகரித்தார். மிரட்டலாக ஆடிய டிராவிஸ் ஹெட் 115 பந்துகளில் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ஸ்டீவன் சுமித்தும் சதமடித்தார். அவருக்கு இது 33-வது சதமாகும். 1½ ஆண்டுக்கு பிறகு அதாவது 25 இன்னிங்சுக்கு பிறகு வந்த சதத்தின் மூலம் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஸ்கோர் 316-ஐ எட்டிய போது சுமித் (101 ரன், 190 பந்து, 12 பவுண்டரி) ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். சுமித்- ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 241 ரன்கள் (302 பந்து) திரட்டியது. அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் (5 ரன்) மற்றும் டிராவிஸ் ஹெட் (152 ரன், 160 பந்து, 18 பவுண்டரி) ஆகியோரை பும்ரா ஒரே ஒவரில் காலி செய்தார். இதன் பின்னர் கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி துரிதமாக ரன் எடுத்து ஸ்கோர் 400-ஐ தாண்ட வழிவகுத்தார்.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 405 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த கேரி, 70 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 117.1 ஓவர்களில் 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய தயாராகி வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.  

 

Read Entire Article