பிரியங்காவின் புதிய அரசியல் பாதை!

2 hours ago 2

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் மேடைகள், பேரணிகளில் ஒலித்துக் கொண்டிருந்த பிரியங்காவின் குரல் இனி நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கப்போகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, நேருவின் குடும்பத்தினர் வழி வழியாக முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்கள். நேருவின் தந்தை மோதிலால் நேரு 1919-1920, 1928-1929 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக புகழ் பெற்று விளங்கினார். அதன்பிறகு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என்று எல்லோருமே காங்கிரசில் தலைவர்களாக இருந்த நேரத்தில், ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா மட்டும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் குடும்பத் தலைவியாகவே இருந்து வந்தார்.

முதலில், தாயார் சோனியாகாந்தி, சகோதரர் ராகுல்காந்திக்கு தேர்தல் பணியாற்றிய அவர், 2019-ம் ஆண்டுதான் தீவிர அரசியலில் நுழைந்தார். அதே ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி, காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அம்மாநிலம் முழுமைக்கும் கட்சியின் பொதுச் செயலாளரானார். அங்கிருந்து அவரது அரசியல் பயணமும் தொடங்கியது. அவரது மேடைப் பேச்சு கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 52 வயதான பிரியங்கா பேச்சில் மட்டுமல்லாமல், நடை, உடை, பாவனை அனைத்திலும் பாட்டி இந்திரா காந்தியையே அனைவருக்கும் நினைவுபடுத்தினார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருடைய சகோதரர் ராகுல்காந்தி 2-வது முறையாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா நிறுத்தப்பட்டார். வயநாடு நிலச்சரிவின்போதே பாதிக்கப்பட்ட பகுதிக்கு அவர் நேரடியாக சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது, அந்தத் தொகுதியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. வயநாடு தொகுதி வாக்காளர்களில் 41 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 13 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் என்ற நிலையில், அவர் வெற்றி பெறுவது உறுதி என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டது. ஆனால், ராகுல்காந்தியைவிட அதிக வாக்கு பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டபோது 72.92 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இப்போது 9 சதவீதம் குறைந்து, அதாவது 64.72 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. என்றாலும், பிரியங்கா 4 லட்சத்து 10 ஆயிரத்து 931 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இது ராகுல்காந்தி பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட 46 ஆயிரத்து 509 அதிகமாகும். இனி வயநாடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்காகவும் பிரியங்காவின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகிறது. இப்போது, சோனியா காந்தி குடும்பத்தில், அவர், மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா என அனைவரும் ஒரே நேரத்தில் எம்.பி.க்களாக முத்திரை பதித்துவிட்டனர். பாட்டி இந்திரா காந்தியைப்போல் பிரியங்காவும் அரசியல் உலகில் உருவெடுப்பார் என்பதும், அவரது புதிய அரசியல் பாதை காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் என்பதும் கட்சியினரின் நம்பிக்கையாக இருக்கிறது. 

Read Entire Article